தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வெரைட்டியான சப்ஜெக்ட் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து மக்களின் ஃபேவரட் ஹீரோயினாக இருப்பவர். ஒரு சினிமா நடிகை என்பதை காட்டிலும் நம்ம வீடு பொண்ணு என்ற ஃபீல் கொடுப்பதால் அவருக்கு அனைத்து ஏஜ் குரூப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் 'ஃபர்ஹானா'. இவர் மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து போன்ற திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முஸ்லிம் பெண்ணாக நடித்துள்ளார். தனது குழந்தைகளுக்காக கலாச்சார கட்டுப்பாடுகளை மீறி வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில் இடம்பெற்ற சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இப்படத்தின் டீசர் வெளியானதும் அதற்கு எதிர்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் தடா ஜே. அப்துல் ரஹீம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
'ஃபர்ஹானா' படத்திற்கு எதிராக காவல் துணை ஆணையரிடம் வழங்கப்பட்ட புகாரில் "இஸ்லாமிய பெண் ஒருவர் புர்கா அணிந்து கொண்டு உலகம் முழுவதும் சென்று வியாபாரம் செய்வது போல காட்சிகள் முன்னோட்ட டீசரில் இடம்பெற்று இருந்தன. இது இஸ்லாமிய பண்பாடு கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதால் இப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'புர்கா' திரைப்படத்தில் கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள தேவையில்லை மாறாக விபச்சாரியாக வாழலாம் என்ற புது தத்துவத்தை திணிப்பது போல இருக்கிறது. அதனால் அந்த திரைப்படத்திற்கும் தடை விதித்து இணையத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அப்படத்தின் இயக்குநர் சர்ஜுனையும் கைது செய்ய வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா மற்றும் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான புர்கா என இரண்டு படங்களையும் தடை விதிக்க புகார் அளிக்கப்பட்ட விவகாரம் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி சைலெண்டாக வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் இப்படி ஒரு சர்ச்சை ஏற்பட்டதை எண்ணி மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் அவரின் ரசிகர்கள்.