ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் போடும் எச்சரிக்கை பலகைகளில் புதிய மாற்றங்களைக் வலியுறுத்தியுள்ளது  இந்திய சுகாரதாரத்துறை அமைச்சகம்.


ஓடிடி தளங்கள் இந்தியத் திரைப்படங்களுக்கு பெரும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கின்றன. திரையரங்குகளில் வெளியிடப்படும் படங்களுக்கு இருக்கு தணிக்கை முறைகளை காட்டிலும் ஒடிடி தளத்தில் கூடுதலான சுதந்திரம் இருப்பதாக படைப்பாளிகள் கருதுகிறார்கள். ஆனால் பல சமயங்களில் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் படங்களில் இருக்கும் காட்சிகள் ஒரு தனிபட்ட மத நம்பிக்கையாளர்களை புண்படுத்துவதாக கூறி கடும் எதிர்ப்புகளையும் சந்திக்கதான் செய்கின்றன. தற்போது இந்த சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ள புதிய விதிமுறைகளை எப்படி எதிர்கொள்வதென இந்த நிறுவனங்கள் கலந்தாலோசித்து வருகின்றன.


அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒடிடியில் வெளியாகும் படங்களில்  புகைபிடிக்கும் அல்லது மது அருந்தும் காட்சிகள் வரும்போது குறைந்தது 50 நொடிகள் வரை எச்சரிக்கை வாசகங்களை சேர்க்கவேண்டும் என இந்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது


இதுகுறித்து கலந்தாலோசித்த அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோ சினிமாவை நிர்வகிக்கும் வையாகாம் நிறுவனம் இந்த விதிமுறைகள் திரைப்படங்களில்  பார்வையாளர்களின் அனுபவத்தை குலைக்கும் என தெரிவித்துள்ளனர்.


மேலும் திரையரங்குகளில் பின்பற்றப்பட்டு வருவதுபோல் ஓடிடி தளங்களில்  திரைப்படங்களின் தொடக்கத்திலும் இடைவெளிகளிலும் ஒளி மற்றும் ஒலி வடிவில் எச்சரிக்கை வாசகங்கள் இணைக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளன. ஓடிடி தளங்கள் சில தாங்கள் வெளியிடும் திரைப்படங்களுக்கு தங்களுக்கான சொந்த தணிக்கை செய்யும் வரம்புகளை பின்பற்றி வந்தன. தற்போது இந்த புதிய விதிமுறைகளால் தங்களுக்கான கருத்து சுதந்திரம் பறிபோவதாக உணர்கின்றன இந்த நிறுவனங்கள். மேலும் இனி வெளியாகும் படங்கள் மற்றும் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும்  படங்களில் இந்த எச்சரிக்கை விளம்பரங்களை மூன்று மாதங்களுக்குள் சேர்ப்பது என்பது அசாத்தியமானதும் கூட என  இந்த கூட்டாலோசனையில் எடுத்துரைக்கப்பட்டது.


ஹாலிவுட் இயக்குநரான வூடி ஆலன் தனது ப்ளூ ஜாஸ்மின் திரைப்படத்தை இந்தியாவில் திரையிட திட்டமிட்டிருந்தார் ஆனால்  படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளின்போது எச்சரிக்கை வாசகங்களை கட்டாயமாக சேர்த்தாக வேண்டும் என்று கூறப்பட்டதால் தனது படத்தை இந்தியாவில் திரையிடுவதை ரத்து செய்தார் வூடி ஆலன்.


மறுபக்கம் சுகாதாரத் துறையின் இந்த விதிமுறைகள் அரசியல் ஆர்வலர்களால் வரவேற்கப்படுகிறது. உலகத்திலேயே புகையிலை உற்பத்தி செய்வதில் இரண்டாம் இடத்தில் இருக்கு இந்தியாவில் புகைபிடிப்பதால் மட்டுமே வருடத்திற்கு 13 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. பல கோடிகளை முதலீடு செய்திருக்கும் இந்த ஓடிடி நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்பதை தீவிரமாக யோசித்து வருகின்றன. தேவைப்பட்டால் இவற்றை எதிர்த்து போராட்டக் களத்தில் ஈடுபடவும் கூடும் என எதிர்பார்க்கலாம்.