2023ம் ஆண்டை இனிதே தொடங்கிய பாலிவுட், டோலிவுட், கோலிவுட்..! திரையுலகம் உற்சாகம்..!
கொரோனாவிற்கு பிந்தைய இந்திய திரையுலகம் பெரும் பட்ஜெட்டில் உருவான ஏராளமான படங்களை உருவாக்கினாலும், வசூலை வாரிக்குவித்த படங்கள் என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையிலே அமைந்தது. குறிப்பாக, கொரோனாவிற்கு பிறகு பாலிவுட்டில் வெளியான பெரும் பட்ஜெட் படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்வியது நாம் அனைவரும் அறிந்தது.
ஆனால், இந்த 2023ம் ஆண்டை இந்திய திரையுலகம் இனிதே தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.
கோலிவுட்:
தமிழ் திரையுலகில் வெளியான மிகப்பெரிய நடிகர்களான அஜித் – விஜய் நடிப்பில் வெளியான துணிவு – வாரிசு படங்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் பட்டாளம் தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் ஏராளமான படங்கள் வந்தாலும் இந்த படங்களுக்கு கூட்டம் நிரம்பிக் காணப்படும் என்றே எதிர்பாரக்கலாம்.
இரண்டு படங்களின் தரப்பில் இருந்தும் இதுவரை வசூல் 300 கோடியை கடந்துள்ளதாக இரண்டு தரப்பினரும் அறிவித்துள்ளனர். தமிழ் திரையுலகிற்கு இந்த பொங்கல் தித்திக்கும் இனிப்பான பொங்கலாகவே அமைந்துள்ளது என்பதே உண்மை.
டோலிவுட்:
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல ஆந்திரா, தெலுங்கானாவில் மகர சங்கராந்தி படம் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை கொண்ட திரையுலகமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் விளங்குகிறது.
இந்த மகர சங்கராந்திக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வால்டர் வீரையா திரைப்படமும், பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டியும் வெளியாகின. நமது ஊரைப்போலவே அவர்களுக்கும் வெறிபிடித்த ரசிகர்கள் அங்கு உள்ளனர். இரண்டு படங்களும் கூட்டம் குறையாமல் ரசிகர்கள் வருகையை கொண்டிருப்பதால் இரண்டு படங்களும் இதுவரை 150 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளன.
பாலிவுட்:
இந்திய திரையுலகின் மிகப்பெரிய வர்த்தகத்தை கொண்ட திரையுலகமாக பாலிவுட் உள்ளது. பாகுபலி, கே.ஜி.எப்., ஆர்.ஆர்.ஆர்., காந்தாரா, திரிஷ்யம் என்று தென்னிந்திய திரைப்படங்கள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துக் கொண்டிருந்தபோது பாலிவுட்டில் பட்ஜெட்கள் எகிறினாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதா? என்றால் இல்லை என்ற சூழலே நிலவி வந்தது.
பாய்காட், மோசமான திரைக்கதை போன்றவற்றால் பெரும் பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பதான் படம் பாலிவுட்டிற்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. 4 நாட்களில் மட்டும் 400 கோடி ரூபாய் வசூலை பதான் வாரிக்குவித்துள்ளது. பிரம்மாஸ்திரா, லால்சிங் சத்தா படங்கள் கடந்தாண்டு பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் பதானின் வெற்றி பாலிவுட் திரையுலகிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய திரையுலகில் மிகப்பெரிய வர்த்தகங்களை கொண்ட பாலிவுட், டோலிவுட், கோலிவுட் திரையுலகங்கள் இந்த 2023ம் ஆண்டை இனிதே தொடங்கியிருக்கின்றனர். மேற்கண்ட படங்கள் வேறு, வேறு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் வசூலை குவித்து வருகின்றனர். மேலும், கே.ஜி.எப். படத்திற்கு இந்திய திரையுலகில் கன்னட திரையுலகமும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. மலையாள திரையுலகம் தரமான படங்கள் மூலமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவனிக்கவைத்து வருகிறது.
தற்போது தொடங்கியிருப்பதை போலவே 2023ம் ஆண்டு இனிதாக அமைய வேண்டும் என்று திரையுலகினர் விரும்புகின்றனர்.