திருச்சி, வயலூர் முருகன் கோவில் முருகனின் 7-ம் படை வீடாக போற்றப்படும் திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் முருகனுக்கு பால்குடம், தீர்த்தகுடம், காவடி மற்றும் அலகு குதி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மதியம் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 1 மணி அளவில் முருகன் கோவிலில் இருந்து புறப்பட்டு அதவத்தூர் உய்யகொண்டான் ஆற்றுக்கு செல்கிறார். அங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. அதன் பிறகு அங்குள்ள மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அன்று 8.30 மணியளவில் அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 9 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வழியாக சோமரசம்பேட்டை அருகே உள்ள வரகந்திடலுக்கு 10 மணிக்கு சென்றடைகிறார். அங்கு மண்டகபடியை ஏற்றுகொண்டு இரவு 11 மணியளவில் கீழவயலூர் தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிகிறார், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வடகாபுத்தூர் வந்தடையும் முருகன் அங்கு இரவு தங்குகிறார்.
பின்னர் 5-ந் தேதி காலை 8.30 மணி அளவில் வடக்காபுத்தூரில் இருந்து புறப்படுகிறார். வழிநெடுக்கிலும் பக்தர்களுக்கு அருள்பலிக்கின்றார், காலை 10.30 மணியளவில் சோமரசம்பேட்டை வந்தடையும் முருகன் அங்கு சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், உய்யகொண்டான் திருமலை உஜ்ஜிவநாதர், அல்லித்துறை பார்வதி ஈஸ்வரர், சோழங்கநல்லூர் காசிவிஸ்வநாதர் ஆகிய தெய்வங்களை சந்திக்கிறார். அதன்பிறகு முருகன் சோமரசம்பேட்டை நான்கு வீதிகளிலும் வலம் வந்து அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அதேபோல் அனைத்து சாமிகளும் இரவு 7 மணி வரை அங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதன் பின்னர் அனைத்து சாமிகளும் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சோமரசம்பேட்டையில் இருந்து புறப்படும் முருகன் அல்லித்துறை மற்றும் அதவத்தூரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து அன்று இரவு அதவத்தூரில் தங்குகிறார். மறுநாள் 6-ந் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வந்தடைகிறார். விழாவையொட்டி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன் மேற்பார்வையில் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்