பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சாதாவுடனான தனது பிரமாண்ட நிச்சயதார்த்தத்திற்கு பின், சில நாட்களுக்கு முன்பு வரை ஹாட் செய்தியாக இருந்தார். நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, அவர் கடந்த சில நாட்களாக பொது மேடைகளில் இருந்து விலகி இருந்தார், தற்போது மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அவர் சில நாட்களுக்கு பின் வெளியில் காணப்பட்டார்.
புகைப்படத்தை புறக்கணித்த நடிகை
புகைப்படக் கலைஞர்கள் கண்ணில் அவர் படவில்லை என்றாலும், சனிக்கிழமையன்று அவரை வெளியில் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். எல்லோர் கையிலும் மொபைல் இருக்கும் காலத்தில் புகைப்பட கலைஞர்களின் தேவை இல்லை என்பதால், அங்கு சூழ்ந்து இருந்தவர்களே அவரை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். அதனை விரும்பாத நடிகை பரினீதி அவர்களிடம் அதிருப்தி தெரிவித்ததாக தெரிகிறது.
வீடியோ வைரல்
நடிகை பரினீதி சோப்ரா புகைப்படம் எடுப்பவர்களை புறக்கணித்து திரும்பி செல்லும் வீடியோ சனிக்கிழமை இரவு முதல் இணையத்தில் பரவி வருகிறது. அவர் ஒரு விருது வழங்கும் நிகழ்வின் இடத்தை விட்டு வெளியேறும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது, அதில் அவர் இளஞ்சிவப்பு நிற உடை அணிந்திருப்பதைக் காணலாம்.
கேமராவை பார்த்து திரும்பிய பரினீதி
நடிகை பரினீதி விழா அரங்கில் இருந்து வெளியேறும்போது, புகைப்படக்காரர்கள் இன்னும் சில படங்களுக்கு போஸ் கொடுக்கச் சொல்ல, அது பரினீதியை எரிச்சலூட்டியது. கேமராக்களை பார்த்துவிட்டு அவர் பின்னால் திரும்பினார். திரும்பும் முன், "நிறுத்துங்க" என்று அவர் இந்தியில் கூறுவது வீடியோவில் கேட்கிறது. கேமராவை பார்க்காமல் திரும்பி நின்றவர் அங்கிருந்து புகைப்படக் கலைஞர்கள் போகும்வரை திரும்ப மறுத்துவிட்டார். புகைப்படக் கலைஞர்கள் ஓரமாக நகர்ந்தவுடன், அவர் வேகமாக வெளியேறி, தன் காரில் ஏறி சென்றார்.
'சம்கிலா' திரைப்படம்
பரினீதி அடுத்ததாக தில்ஜித் தோசன்ஜுக்கு ஜோடியாக 'சம்கிலா' படத்தில் நடிக்கிறார். OTT வெளியீட்டிற்கு நேரடியாகச் செல்லும் இப்படத்தில், தில்ஜித், பஞ்சாபின் மிகப்பெரிய இசைக் கலைஞரான அமர் சிங் சம்கிலாவாகக் நடித்திருக்கிறார். அமர் சிங் சம்கிலாவின் பாடல் கேசட்டுகள் அதிக விற்பனை ஆகி சாதனை படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் அவரது மனைவி அமர்ஜோத் கவுரின் பாத்திரத்தில் பரினீதி நடிக்கிறார். அமர் சிங் சம்கிலா மற்றும் அவரது மனைவி அமர்ஜோத் கவுர் ஆகியோர் மார்ச் 8, 1988 அன்று அவர்களது இசைக்குழு உறுப்பினர்களுடன் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.