இந்தியன் 2
இயக்குநர் ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் சேனாபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தியன் 2 நாளை ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு ரசிகர்களிடம் பலமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் பிரபாஸ் நடித்து வெளியான கல்கி படத்தில் கமலின் கதாபாத்திரம் பரவலான கவனம் பெற்றதைத் தொடர்ந்து, இந்தியன் 2 படத்திலும் கமலின் தோற்றம் பற்றிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
சென்னையில் தொடங்கிய இந்தியன் 2 படத்திற்கான ப்ரோமோஷன்கள் மும்பை, மலேசியா, சிங்கப்பூர், தெலங்கானா, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தில் நடித்துள்ள கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் படம் பற்றிய புதிய தகவல் ஒன்றை வழங்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். தற்போது இந்தியன் 3 படத்தைப் பற்றிய குட்டி அப்டேட் ஒன்றை கேரள பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 க்ளைமேக்ஸில் இந்தியன் 3
இந்தியன் 2 படத்துடன் இந்தியன் 3ஆம் பாகத்திற்கான மொத்த படப்பிடிப்பு வேலைகளையும் முடித்துவிட்டார் இயக்குநர் ஷங்கர். இந்தியன் 2ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பைத் தொடங்கும்போது மூன்றாவது பாகம் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தனக்கு இல்லை என்று ஷங்கர் கூறினார். இரண்டாம் பாகத்திற்கு மொத்தம் ஆறு மணி நேரத்திற்கான ஃபுட்டேஜ்கள் இருந்திருக்கின்றன. நேரத்தை சுருக்கி காட்சிகளை நீக்கினால் அது படத்தின் சாரத்தை பாதிக்கும் என்பதால் மூன்றாவது பாகத்தை வெளியிடலாம் என்று ஷங்கர் முடிவு செய்திருக்கிறார். இந்தியன் 2 படம் வெளியாகி அடுத்த ஆறு மாதங்கள் கழித்து இந்தியன் 3 படத்தை வெளியிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஷங்கர் இந்தியன் 2 படத்தின் க்ளைமேக்ஸில் இந்தியன் 3 படத்தின் ட்ரெய்லர் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்றைய அரசியல் சூழலில் இந்தியன் தாத்தா திரும்பி வந்தால் எப்படி இருக்கும் என்கிற ஐடியாதான் இந்தியன் 2 படம். ஒரு சின்ன சரிவுக்குப் பிறகு இந்தியன் தாத்தா திரும்பி வருவது, சேனாபதியின் எழுச்சி என முதல் பாகம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரம் மூன்றாவது பாகம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.