கரூர் அன்ன காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நான்கு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேக விழா.


 




 


 



கரூர் பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் ஆன அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்து வெங்கமேடு காமாட்சியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக வெங்கமேடு காமாட்சியம்மன் ஆலயத்தில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு கரூர் அன்ன காமாட்சியம்மன் ஆலயத்திற்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.


 


 




அதை தொடர்ந்து அன்று மாலை கணபதி ஹோமத்துடன் முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து மறுநாள் காலை இரண்டாம்  கால யாக வேள்வியும் அதை தொடர்ந்து இரவு மூன்றாம் கால யாக வேள்வியும் நடைபெற்ற நிலையில் இன்று காலை நான்காம் கால யாக வேள்வி நடைபெற்று தொடர்ச்சியாக யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு மேள தாளங்கள் வான வேடிக்கை முழங்க யாக சாலையில் இருந்து நான்கு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட தீர்த்த கலச குடத்தை ஆலயத்தின் சிபாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு ஆலய வலம் வந்த பிறகு கோபுர கலசம் வந்தடைந்தனர்.


 


 




தொடர்ந்து கோபுர கலசத்திற்கு வேத மந்திரங்கள் கூறியபடி பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு பட்டாடை உடுத்தி உன்ன மாலையில் அணிவித்த பிறகு மகா தீபாராதனை காட்டப்பட்டது.


 


மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற கரூர் அன்ன காமாட்சியம்மன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.




அதை தொடர்ந்து அனைத்து பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள நூறு ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு அன்ன காமாட்சியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


 


 




கரூர் பேருந்து நிலையம் அருகே வீற்றிருக்கும் ஆலயம் என்பதால் காலை முதலே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கரூர் நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஆலயம் அருகே தமிழ்நாடு அரசு அவசர சிகிச்சை 108 வாகனமும் தமிழ்நாடு தீயணைப்பு படை வீரர்கள் வாகனமும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.