நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘இந்தியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது.
காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கிரேன் கீழே விழுந்து படத்தின் உதவி இயக்குநர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு, கமல் அரசியலில் கவனம் செலுத்தியது, ஷங்கர்- லைகா நிறுவனம் இடையேயான கருத்து மோதல் ஆகியவற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் நடிகர் விவேக்கின் மரணம், காஜல் அகர்வால் குழந்தை பெற்றது ஆகிய காரணத்தால் இவர்களுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே நடிகர் உதயநிதி ஸ்டாலின் கமல், ஷங்கர், லைகா நிறுவனம் ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்படுவதாக நேற்று நள்ளிரவில் அப்டேட் வெளியானது. இதுவரை இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 30 சதவிகித படப்பிடிப்பில் முதலில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும், விரைவில் கமல்ஹாசன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், இந்தியன் தாத்தாவை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.