நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் நிலையில், இதற்கான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற உள்ளது. 


லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “இந்தியன் 2”. இந்த படம் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்து மாபெரும் ஹிட் அடித்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாகும். தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் கமல் நடித்திருந்தார். இதனிடையே 22 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 






ரகுல் ப்ரித் சிங், காஜல் அகர்வால், சித்தார்த் , பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டவர்களும்,  மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, மாரிமுத்து என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தியன் 2 படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.


படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, தயாரிப்பு நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் இடையேயான கருத்து மோதல், கொரோனா தொற்று என பல காரணங்களால் 6 ஆண்டுகளாக இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் காலதாமதமானது. இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 


இப்படியான நிலையில் இந்தியன் 2 படத்திற்கு பான் இந்தியா அளவில் பிரமோஷன் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சி மும்பையில் நடக்கவுள்ளது. இதேபோல் ரிலீசுக்கு முன்னால் பிரமாண்டமாக ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது. மேலும் உலக அளவில் சென்று படத்தை பிரோமோஷன் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.