இந்தியன் 2 இண்ட்ரோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசனின் சேனாபதி பாத்திரம் பற்றிய கலக்கல் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. 


இயக்குநர் ஷங்கர்- நடிகர் கமல்ஹாசனின் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இப்படத்தின் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்டதுடன் நடிகர் கமல்ஹாசனின் சேனாபதி பாத்திரம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.


இந்தியன் தாத்தா கதாபாத்திரம் கோலிவுட்டின் கிளாசிக் கதாபாத்திரங்களுள் ஒன்றாக இன்றும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளாகத் தயாராகி வருகிறது.


காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா,  மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா எனப்  பெரும் நட்சத்த்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு கோடை விடுமுறை ஸ்பெஷலாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், இப்படத்தின் இன்ட்ரோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழு நேற்று வெளியிட்டது. மேலும் சூப்பர் ஸ்டாரும் நடிகர் கமல்ஹாசனின் உற்ற நண்பருமான நடிகர் ரஜினிகாந்த் இந்த வீடியோவை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது.


இந்த அறிவிப்பு ரசிகர்களை ஏற்கெனவே உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் போஸ்டர் ஒன்றை படக்குழு தந்துள்ளது.


இந்தியன் தாத்தா கதாபாத்திரமான சேனாபதி ஊழலுக்கு எதிரானவர்களை தண்டிக்க பயன்படுத்திய குறுவாளை பகிர்ந்து, இந்தியன் 2 குழு மாலை 5.30 மணிக்கு இண்ட்ரோ வீடியோ வெளியாகும் என படக்குழு பகிர்ந்துள்ளது. 


 






சேனாபதி கதாபாத்திரம் பற்றிய அப்டேட்டாக இது இருக்குமா என ஏற்கெனவே ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.