இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தென் ஆப்பிரிக்கா விரைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் - கோலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எனக் கொண்டாடப்படும் இயக்குநர் சங்கர் இருவரது கூட்டணியின் 1996ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன்.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்களுள் ஒருவரான கமல்ஹாசன் இந்தப் படத்தில் இந்தியன் தாத்தாவாகக் கலக்கி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்து, வசூலிலும் இந்தப் படம் சாதனை படைத்தது.
மேலும் அன்று தொடங்கியே இந்தியன் 2 படம் குறித்த எதிர்பார்ப்புகளும் உரையாடல்களும் தொடர்ந்து வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு இந்தியன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் தொடங்கியது.
ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்து, கொரோனா ஊரடங்கு, கமல்ஹாசனின் அரசியல் பயணம், சங்கர் - லைகா நிறுவனம் இடையேயான மோதல் ஆகியவற்றால் தடைபட்டது. தொடர்ந்து இந்தப் பிரச்னைகள் ஓய்ந்து சென்ற செப்டெம்பர் மாதம் தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் நிலையில், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, பீகார் வனப்பகுதிகள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தியன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நிறைவுற்று படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தென் ஆப்பிரிக்கா விரைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 14 நாள்களுக்கு இயக்குநர் சங்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் தென் ஆப்பிரிக்காவில் தான் இருப்பார்கள் என்றும், சர்வதேச ஸ்டண்ட் கொரியோகிராஃபர்கள் சண்டைக் காட்சிகளை அமைக்க, ரயிலில் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் காட்சி இந்தியன் 2 படத்தில் இடம்பெற உள்ள முக்கிய, திருப்புமுனைக் காட்சியாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மே மாதத்துடன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், வரும் தீபாவளிக்கு இந்தியன் 2 ரிலீசாகலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்தியன் 2 படத்தில் 90 வயது இந்தியன் தாத்தா கெட் அப்பில் நடிகர் நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக காஜல் நடிப்பதாகவும், காஜலின் மேக் அப்புக்காக மட்டும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாவதாகவும் முன்னதாகத் தகவல் வெளியானது.
இதேபோல், இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஏழு வில்லன்கள் இருப்பதாகவும், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், சித்தார்த், பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ், ஜி.மாரிமுத்து, கிஷோர் ஆகியோர் வில்லன்களாக இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை காண்பிக்காத, படப்பிடிப்பு நடத்தப்படாத லொகேஷன்களை இந்தப் படத்துக்காக தேடித்தேடி படப்பிடிப்பு நிகழ்த்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.