நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இந்தியன் படம்


கடந்த 1996 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் என ஏகப்பட்ட பேர் நடித்த படம் “இந்தியன்”. இதில் நேர்மையாக நடக்கும் சுதந்திர போராட்ட தியாகி, ஊழலில் திளைக்கும் மகன் என இரண்டு வேடத்தில் கமல் நடித்திருந்தார். சமூகத்தில் நடக்கும் ஊழல் விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் இந்தியன் தாத்தாவாக அசத்தியிருந்தார். 


இந்தியன் 2


இதனிடையே 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. லைகா நிறுவனம் இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிப்பதாக அறிவித்தது. ஆனால் படப்பிடிப்பில் நடந்த விபத்து, கொரோனா ஊரடங்கு, தயாரிப்பு தரப்பு - ஷங்கர் இடையே பிரச்சினை என ஏகப்பட்ட காரணங்களால் ஷூட்டிங் நடக்கவே இல்லை. அதுமட்டுமல்லாமல் விவேக், மனோபாலா, மாரிமுத்து, நெடுமுடி வேணு என அடுத்தடுத்து பிரபலங்கள் மறைவாலும் காட்சிகளை படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. 


இப்படியான நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு இப்படத்தின் பிரச்சினையை தீர்த்து வைத்தார். மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வந்தது. அவ்வப்போது படத்தின் போஸ்டர்களும் வெளியானது. இந்தியன் 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங்,பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால்,  சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜார்ஜ் மரியான் என ஏகப்பட்ட பேர் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 


மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா? 


இதனிடையே இந்தியன் 2 படம் பல முறை ஷூட்டிங் முடிவடையாமல் தள்ளிப்போய் கொண்டு இருக்கிறது. கிட்டதட்ட 6 ஆண்டுகளாக ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. ஜூன் மாதம் படம் வெளியாகும் என தேதி குறிப்பிடாமல் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதில் சிக்கல் எழுந்துள்ளது. காரணம் ஜூன் மாதம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் வெளியாகிறது. 


இதில் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் கல்கி 2898 ஏடி படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். பிரமாண்டமாக உருவாகும் இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் இந்தியன் 2 படத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் முடிவடைவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.