தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தூத்துக்குடி மாவட்டம் எட்டையப்புரம் அருகேயுள்ள முத்துலாபுரம் கோட்டூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சந்தன மாரியம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த போது அங்கு சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். 


அந்த பணத்தைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கிருபை நகரில் சந்த மாரியம்மாள் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். வீட்டை தனது பெயரில் தான் பதிவு செய்துள்ளார். இதனிடையே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பாலமுருகன் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்து கிருபை நகரில் உள்ள வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அப்போது பாலமுருகன் செலவுக்கு பணம் கேட்கும்போதெல்லாம் சந்தன மாரியம்மாள் கொடுக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. 


அதேசமயம் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வீட்டில் சந்தன மாரியம்மாள் வேலை செய்து வந்தது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். இப்படியான நிலையில் சந்தன மாரியம்மாள் சுமார் 40 பவுன் நகையை தனது தாய்மாமா காளிமுத்துவிடம் வாங்கி விட்டு திருப்பி கேட்டபோது கொடுக்க மறுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாலமுருகன், காளிமுத்து இருவரும் சந்தன மாரியம்மாள் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். 


இதனிடையே நேற்று மாலை சந்தன மாரியம்மாள் வெளியே சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் கணேஷ் நகர் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பாலமுருகன், காளிமுத்து இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த சந்தன மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.


நடுரோட்டில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் காட்டுத்தீயாக பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தன மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் காளிமுத்து, பாலமுருகன் இருவரும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸில் சரணடைந்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.