இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு நேற்று ஜூன் 1ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் ஷங்கர் கமல்ஹாசன் உட்பட இப்படத்தில் நடித்திருக்கும் பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத், காஜல் அகர்வால், தெலுங்கு நடிகர் பிரம்மானந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் கலந்துகொண்டார்கள். இசை வெளியீட்டு விழா தொடங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்பாக இந்தியன் 2 படத்தின் பாடல்கள் வெளியாகின. இப்படத்தில் ஒரு பிஜிஎம் உட்பட மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.


இதில் கம் பேக் இந்தியா, பாரா, கதறல்ஸ் ஆகிய மூன்று பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால் இந்தியன் 2 பாடல்களை முன்வைத்து அனிருத் மற்றும் ரஹ்மான் ரசிகர்களுக்கு இடையில் சமூக வலைதளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.


ரஹ்மானுடன் அனிருத் ஒப்பீடு


இந்தியன் முதல் பாகத்தின் பாடல்களுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார். இப்பாகத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது இந்திய 2 படத்தின் பாடல்களையும் முதல் பாகத்தின் பாடல்களோடு ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மோதி வருகிறார்கள். ரஹ்மானின் இசையோடு ஒப்பிட்டு அனிருத்தின் இசையை பலர் சமூக வலைதளத்தில் மீம்களை பகிர்ந்து வந்தார்கள். இந்த ட்ரோல்களுக்கு எல்லாம் மிகவும் பக்குவமான பதிலை அனிருத் இந்த நிகழ்ச்சியில் பேசினார்


என்னோட ஃபேவரெட் இயக்குநர் ஷங்கர் தான்


மேடையில் பேசிய அனிருத் "நான் ஒரு 90ஸ் கிட். அதனால எனக்குப் பிடித்த இயக்குநர் ஷங்கர் தான் என்னுடைய முதல் படம் 3. இப்போ என்னுடைய 33 ஆவது படம் இந்தியன் 2 என்று நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு." என்று கூறினார்.


நானே பெரிய ரஹ்மான் ரசிகன் தான்


தொடர்ந்து பேசிய அனிருத் " இப்போ எல்லாரும் அந்தக் காலம், இந்த காலம்னு சொல்றாங்க. ஷங்கர் ஸ்டைலில் சொன்னால் சிக்ஸூக்கு அப்புறம் செவன் டா, ஏ ஆர் ரஹ்மானுக்கு அப்புறம் எவன் டா. நானும் ரவுடி தான் மாதிரி நானே பெரிய ரஹ்மான் ரசிகன் தான். ஷங்கர் மற்றும் கமல் மாதிரியான இரண்டு க்ளோபல் ஸ்டார்கள் இருக்கும் படத்தில் நான் வேலை செய்திருக்கிறேன். அதனால் இதுவே எனக்கு ஒரு க்ளோபல் படம் தான். ஜூலை 12ஆம் தேதி இந்தியன் தாத்தா கதற விடப் போறாரு" என்று அனிருத் பேசியுள்ளார்.