இயக்குநர் ஷங்கர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த  1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “இந்தியன்” . இந்த திரைப்படம்  வெளியாகி  25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது என ஷங்கர் திட்டமிட்டிருந்தார். கமலும் ஓக்கே சொன்னதால் படத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு எடுத்துச்சென்றார் இயக்குநர். இதனையடுத்து லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.  கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் , தங்கையாக பிரியா பவானி சங்கரும் கமிட்டாகியிருந்தனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும் தேர்வு செய்யப்பட்டதையடுத்து , சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து வேலைகளை முடுக்கினார் ஷங்கர். 20 கிரேன்கள் வரவலைக்கப்பட்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் ,  பாரம் தாங்காமல் சாய்ந்த கிரேனில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு படப்பிடிப்பு தள்ளிப்போனது.



கமலின்  அறுவை சிகிச்சை, அவரின் அரசியல் பயணம்,  கொரோனா பரவல் என படம்  மீண்டும் மீண்டும் தள்ளிப்போனதால், இந்தியன் 2 -ஐ கிடப்பில் போட்ட  இயக்குநர் ஷங்கர் அந்தியன் 2 , ராம்சரணை வைத்து புதிய தெலுங்கு  படம் என மற்ற படங்களில்  ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பு நிறுவனமான லைகா, இந்தியன் 2 படத்தை இயக்கிய பிறகுதான் மற்ற படங்களை இயக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது.  மேலும் படத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகம் செலவு செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியது. இது குறித்து பதிலளித்த  ஷங்கர் தரப்பு , படத்தை தில்ராஜ் என்பவர் தயாரிக்க ஒப்பந்தம் செய்ப்பட்டதாகவும், அவரிடம் இருந்து லைகா தயாரிப்பை பறித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார், மேலும் 270 கோடி ரூபாய் பட்ஜெட் கேட்ட நிலையில் 250 கோடி மட்டுமே ஒதுக்கியதால் நிறைய நிதி நெருக்கடிக்கு ஆளானதால், படத்தை  குறிப்பிட்ட தேதியில் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது என விளக்கமளித்தார். மேலும் படத்தை தில்ராஜ் தயாரித்திருந்தால் படம் என்றோ முடிக்கப்பட்டிருக்கும் என்றார்  இயக்குநர் ஷங்கர்.



வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரு தரப்பும் பேசி முடிவெடுங்கள் என அறிவுறுத்தியது. ஆனால் பேச்சு வார்த்தையில் சுமூகமான நிலை எட்டப்படாததால் , மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். இது குறித்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிமன்றம், இந்தியன் 2 பிரச்சனைக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற  நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. எது எப்படியோ ஒரு வழியாக இந்தியன் 2  பிரச்சனை  முடிவுக்கு வந்து படத்தை தொடங்கினால் சரி என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்