இந்தியன் 2 (Indian 2) படத்தில் அனுமதியின்றி வர்மக்கலை முத்திரை பயன்படுத்தியதாக படக்குழு மீது தொடரப்பட்ட வழக்கில், நாளை படக்குழு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


நாளை மறுநாள் ரிலீஸ்


ஷங்கர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் தாத்தாவான சேனாபதி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் இப்படத்தில் மீண்டும் தோன்ற உள்ள நிலையில், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இப்படத்தினைத் தயாரித்துள்ளது. ஷங்கர் - கமல்ஹாசன் மெகா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ள நிலையில், இப்படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், சுமார் ரூ. 250 கோடிகள் செலவில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ளது. படக்குழுவினர் தற்போது இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.


வர்மக்கலை பயன்பாடு


இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் எனும் நபர் இந்தியன் 2 படத்தினை வெளியிட தடை கோரி முன்னதாக மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 55 ஆண்டுகளாக மஞ்சா வர்மக்கலை என்ற பெயரில் தான் தற்காப்பு பயிற்சி பள்ளி நடத்தி வரும் நிலையில், 1996ஆம் ஆண்டு இந்தியன் படத்தில் பேசுபொருளாக அமைந்த வர்மக்கலையை ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடிகர் கமல்ஹாசனுக்கு தான் தான் பயிற்றுவித்ததாகவும், ரகசிய வர்மக்கலையை பயிற்றுவித்த தனது பெயர் அந்தப் படத்தின் டைட்டிலில் அப்போது சேர்க்கப்பட்டதாகவும், தற்போது 28 ஆண்டுகள் கழித்து வெளியாகும் இந்தியன் 2 படத்தில் தான் சொல்லிக்கொடுத்த வர்மக்கலை முத்திரைகளை பயன்படுத்த தடையில்லா சான்று தன்னிடம் பெறவில்லை என்றும் தனது மனுவில் கூறியுள்ளார்.


மேலும், தனது பெயரை டைட்டில் கார்டில் சேர்க்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்பியும் படக்குழு பதில் தெரிவிக்கவில்லை என்றும், தன் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை இந்தியன் 2 படத்தினை வெளியிட தடை விதிக்க வேண்டுமென்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.


வழக்கு நாளை ஒத்திவைப்பு


ராஜேந்திரன் தொடர்ந்த இந்த வழக்கு நீதிபதி செல்வமகேஸ்வரி முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் பதில் அளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டுமென இயக்குநர் ஷங்கர் சார்பில் ஆஜரான வக்கீல் கோரினார்.


இந்தியன் 2 திரைப்படம் நாளை மறுநாள் ஜூலை 12ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் நிலையில், இந்த வழக்கில் விரைவில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை நாளை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.