இந்தியன் 2
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு (Indian 2 Audio Launch) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி, காஜல் அகர்வால், சிவகார்த்திகேயன், சிலம்பரசன் உள்ளிட்ட பல நட்ச்சத்திரங்கள் இந்த நிக்ழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்தியன் 2 படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் இசையமைப்பாளர் அனிருத் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறார். இந்நிலையில் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த படத்தின் பாடலாசிரியர் பா.விஜய் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இது என்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸ்
“இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் இருந்து அவருடைய படங்களுக்கு நான் பாடல்கள் எழுதி வருகிறேன். இதில் ஒவ்வொரு பாடலுமே என்னை ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் நாங்கள் வெளியிட்ட பாரா பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட உலக தமிழ் மக்கள் கொண்டாடு ஒரு பாடலாக இந்த பாடல் மாறியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் இந்த பாடல் என்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி வைப்பதாக அமைந்துள்ளது. அப்படிபட்ட பெரிய வாய்ப்பை கொடுத்த இயக்குநர் ஷங்கருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்“ என்று பா விஜய் கூறியுள்ளார்
பாரா பாட்டு வரும் ரகசிய இடம்
தொடர்ந்து பேசிய அவர் “இந்தப் பாட்டு படத்தில் வரும் இடம் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் அது பற்றி நான் பேசமுடியாது. எந்த விதமான பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழில் அமைய வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் விருப்பப்பட்டார். அது எளிய மொழியிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதால் நான் அகநாநூறு, புறநாநூறு போன்ற சங்க இலக்கியங்களில் இருந்து சில வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறேன். எதிரணிகள் படையெடுத்து வரும்போது பாயன்படுத்தப்படும் வார்த்தை ‘பாரா’ அதை தான் இந்தப் பாடலின் தொடக்கமாக பயன்படுத்தி இருக்கிறோம். இதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் இன்னும் மூன்று பாடல்களை நான் எழுதி இருக்கிறேன்“ என்று அவர் கூறினார்.
அனிருத் உடன் இரண்டாவது முறையாக நான் பணியாற்றுகிறேன். அனிருத் இன்று நவீன இசையின் ஐகானாக இருக்கிறார். பாரா பாடல் என்னுடைய வெற்றிப்பாடல் மட்டுமில்லை உங்களுடைய இசையில் இந்தப் பாடலை ரசிகர்கள் இன்னும் அதிகமாக ரசிக்கிறார்கள் என்று வெளியானபோது நான் அவரிடம் சொன்னேன். இந்த பாடலின் டியூன் கொடுத்தபோது எனக்கு கூஸ்பம்ப்ஸ் ஏற்பட்டது . அந்த டியூனை மெருகேற்றும் வகையில் நாங்கள் நிறைய உழைத்தோம். அனிருத்தின் குரல் இந்தப் பாடலில் கேட்கும் போது அனல் பறந்தது“ என்று பா விஜய் அனிருத்தை பாராட்டியுள்ளார்.