இந்தியன் 2 (Indian 2) படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. ஷங்கர் - கமல்ஹாசனின் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக, 28 ஆண்டுகளுக்குப் பின் இப்படம் வெளியாகும் நிலையில், அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


வெளியான பாடல்கள்


இசை வெளியீட்டு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிலையில், படத்தின் பாடல்கள் முன்கூட்டியே 3 மணிக்கே வெளியாகும் என லைகா சர்ப்ரைஸ் அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டது. அதன்படி இந்தியன் 2 படத்தின் ஆறு பாடல்களைக் கொண்ட ஜூக் பாக்ஸ் தற்போது வெளியாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இயக்குநர் ஷங்கர் உடன் இந்தியன் 2 படத்துக்காக முதன்முறையாக அனிருத் கூட்டணி அமைத்துள்ளார். மேலும் ஏற்கெனவே கமல்ஹாசனுடன் அனிருத் கூட்டணி அமைத்த விக்ரம் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்று வரை வரவேற்பினைப் பெற்று வரும் நிலையில், இதே போன்று இந்தியன் 2 படப்பாடல்களும் ஹிட் அடிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.


இந்நிலையில் தற்போது பாரா, கேலண்டர் சாங், நீலோர்ப்பம், ஜகாஜகா, கம் பேக் இந்தியன், கதறல்ஸ் ஆகிய ஆறு பாடல்களைக் கொண்ட ஜூக் பாஸ் வெளியாகி உள்ளது. 



இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்


இன்று மாலை நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிற மொழி சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ் குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.


கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு பல தடங்கல்கள், சிக்கல்கள் தாண்டி கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து  வெளியாகிறது. லஞ்சம், ஊழலை தட்டிக் கேட்கும் முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதியாக கமல்ஹாசன் முதல் பாகத்தில் ஏற்ற வேடத்தையே இந்தப் படத்திலும் தொடர்கிறார்.  லைகா - ரெட் ஜெயிண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், ரவிவர்மன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


தமிழ் சினிமா பாக்ஸ் ஆஃபிஸை தூக்கி நிறுத்துமா?


ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் கோலிவுட் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகும் நிலையில், 2024ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தடுமாறி வரும் கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸை இந்தியன் 2 பாக்ஸ் ஆஃபிஸ் தூக்கி நிறுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரம்மானந்தம், மறைந்த நடிகர்களான விவேக், மனோ பாலா, முந்தைய பாகத்தில் வந்த நெடுமுடி வேணு,  மாரிமுத்து உள்ளிட்ட பலர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.