தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகரான கமல்ஹாசன் -  கோலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராகக் கொண்டாடப்படும் ஷங்கர் இருவரது கூட்டணியின் 1996ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன். 


நடிகர் கமல்ஹாசன்  இந்தியன் தாத்தாவாகக் கலக்கிய இப்படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்து, மாபெரும் வசூல் சாதனையையும் படைத்தது.


தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தொடங்கி, பின் பல்வேறு இடையூறுகளைக் கடந்து, சென்ற ஆண்டு தொடங்கி மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டின் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் முன்னதாக நடிகர் கமல்ஹாசன் இப்படத்துக்கான டப்பிங் பணிகளில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகி கவனமீர்த்தது.


இந்நிலையில் இப்படத்துக்காக இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் ஷங்கர் மேற்பார்வையில் உற்சாகமாக இசையமைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னையில் இந்தியன் 2 படப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கேரவேனில் அமர்ந்து அனிருத்தும் ஷங்கரும் இசைக்கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.






இசையமைப்பாளர் அனிருத் தற்போது கமல் உடன் இந்தியன் 2, நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர், விஜய்யுடன் லியோ என முழுவீச்சில் பணியாற்றி வருகிறார். மறுபுறம் ஷங்கர் ராம்சரண் உடன் கேம் சேஞ்சர் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், ஷங்கரும் அனிருத்தும் முதன்முறையாக இணைந்திருக்கும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


கமல்ஹாசன் இரண்டாம் முறையாக அனிருத்துடன் இப்படத்தில் கைக்கோர்த்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தாண்டி ஹாரிஸ் உடன் மட்டுமே இதற்கு முன் பணியாற்றியுள்ள இயக்குநர் ஷங்கர், தற்போது முதன்முறையாக அனிருத் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.


காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா  சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், ஜி.மாரிமுத்து, கிஷோர் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, பீகார் வனப்பகுதிகள், தென் ஆப்பிரிக்கா, தைவான் என பல இடங்களிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.