தென் இந்திய சினிமா ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் இரண்டு படங்கள் கமலின் இந்தியன் 2 மற்றும் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2. இரண்டு படங்களும் கூடிய விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நாளை மே 29-ஆம் தேதி இரு படங்களின் இரண்டாவது பாடல்கள் வெளியாக இருக்கின்றன.


இந்தியன் 2


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் , பிரியா பவானி சங்கர் , எஸ்.ஜே சூர்யா , சித்தார்த்  , பாபி சிம்ஹா  உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது, இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர்களான மனோபாலா , விவேக் , மாரிமுத்து  உள்ளிட்டவர்களையும் இப்படத்தில் பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது .


இந்தியன் முதல் பாகத்திற்கு ரஹ்மான் மிக பிரம்மாண்டமான பாடல்களை வழங்கியிருந்ததால் இந்தப் படத்தில் அனிருத் ரஹ்மான் இடத்தை நிரப்புவாரா என்கிற கேள்விக்கு பாரா பாடலில் பதில் கொடுத்திருக்கிறார் அனிருத். இப்படியான நிலையில் இந்தியன் 2 படத்தில்  இருந்து இரண்டாவது பாடல் நாளை மே 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த பாடல் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் இருவருக்கும் இடையிலான ரொமாண்டிக் பாடலாக அமைந்துள்ளது. ‘ நீலோர்பம் ‘ என்கிற இப்பாடலை தாமரை எழுதியுள்ளார். 






புஷ்பா 2






சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள புஷ்பா 2 படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். புஷ்பா முதல் பாகத்தில் சாமி , ஸ்ரீவல்லி போன்ற பாடல்கள் பான் இந்திய ஹிட் அடித்தன. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி அதே அளவிற்கான வரவேற்பைப் பெற்றது.


அடுத்தபடியாக இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கான பாடல் நாளை மே 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தில் சாமி பாடலில் ராஷ்மிகா மந்தனா இந்தி , தமிழ் , தெலுங்கு என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த மாதிரி இந்த பாடலும் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.