தமிழ் சினிமாவில் ஒரு துணை நடிகராக அறிமுகமாகி காமெடி நடிகனாக பிரபலமாகி இன்று ஹீரோ அந்தஸ்தை பெற்றவர் நடிகர் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'விடுதலை' படத்தின் மூலம் ஹீரோவான நடிகர் சூரி தன்னுடைய அட்டகாசமான நடிப்பால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். விடுதலை பார்ட் 2 படமுமும் விரைவில் வெளியாக உள்ளது. அவரின் அபார வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் அவரின் விடாமுயற்சியும் கடுமையான உழைப்பும் தான். 


 



கொட்டுக்காளி:


நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கொட்டுக்காளி'. நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மலையாள நடிகை அன்னா பென்.


இப்படம் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் 'டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில்' திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கும் முன்னதாக 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் போரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். 


 



வெளிநாட்டவர்களுக்கு ஷாக்:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூரி, சர்வதேச திரைப்பட விழாவில் தன்னுடைய படம் திரையிடப்பட்டதை பற்றி தன்னுடைய உணர்வை பகிர்ந்து கொண்டார். அது தொடர்பாக அவர் பேசுகையில் "ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு படத்தை திரையிடுவதற்கே சில தகுதி அடிப்படைகள் கீழ் தான் தேர்ந்து எடுக்கப்பாங்க. அதில் விடுதலை பார்ட் 1 மற்றும் பார்ட் 2 இரண்டு படங்களுமே செலக்ட் ஆனது. அதே டோர்னமென்டில் இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படமும் கலந்து கொண்டது. இந்த இரண்டு படமும் ரோட்டர்டாம் பிலிம் பெஸ்டிவலில்  கலந்து கொண்டது. இவன் தான் இரண்டு படத்திலும் இருக்கிறான் என அங்கு வந்த வெளிநாட்டவர்கள் எல்லாம் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் ஷாக்காக இருக்கிறது. 


அதே போல பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அதே வெளிநாட்டு ஆடியன்ஸ் வந்து இருந்தார்கள். அங்கே 'கொட்டுக்காளி' படம் திரையிடப்பட்டதும் அதே ஆள் தான் இங்கேயும் வரான். என்ன இது எல்லாத்துலயும் இவன் தான் வரான். இந்தியாவில் இவர் ஒரு பெரிய ஆக்டரா இருப்பாரோ? எத்தனை படம் பண்ணி இருக்காரு அப்படினு தான் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். மற்ற ஆட்கள் என்னிடம் சொல்கிறார்கள். இவர் இந்தியால பெரிய நடிகராக இருப்பார் போல எத்தனை படம் பண்ணி இருக்கார் அப்படினு கேக்குறாங்க அப்படினு சொன்னதும் எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது என்றார் நடிகர் சூரி.