இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகிறது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியா , சிங்கப்பூர் , மலேசியா , துபாய் உள்ளிட்ட நாடுகளில் தற்போது இந்தியன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்கள்.
சர்ச்சையாகிய கமல் பேச்சு
இந்தியன் 2 படம் குறித்து கடந்த சில நாட்கள் முன்பு கமல் பேசுகையில் தனக்கு இந்தியன் 3 படத்தின் கதை ரொம்பவும் பிடித்ததாகவும் அதனால் தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும் தெரிவித்திருந்தார். அவர் அப்படி பேசியது சமூக வலைதளங்களில் தவறாக புரிந்துகொள்ளப் பட்டு சர்ச்சையாக மாறியது. இந்தியன் 2 படத்தின் கதை நன்றாக இல்லை என்று அதனால் கமலுக்கு இந்தியன் 2 படத்தின் கதை பிடிக்கவில்லை என்றும் விருப்பமில்லாமல் தான் அவர் இந்தப் படத்தில் நடித்ததாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. தற்போது இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார் கமல்ஹாசன்.
எனக்கு பாயாசம் பிடிக்கிறது என்றால் என்ன பிரச்சனை
கமல் பேசுகையில் “ கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு இயக்குநருடன் வேலை பார்த்து வந்தேன். ஒரே பிரஸ் மீட்டில் டைரக்டர் எனக்கு கால் செய்து என்ன சார் இப்படி பேசிட்டீங்க என்று சொல்லும்படி ஆகிவிட்டது. ஒரு குழந்தையிடம் கேட்காத கேள்வி உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா என்று. அவர்கள் இரண்டுபேரும் இல்லை என்றால் குழந்தையே கிடையாது. அதே போல் எனக்கு இந்த ஒரு சீன் பிடித்திருக்கிறது என்று நான் சொன்னால் எனக்கு மற்ற சீன் பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. என்னுடைய நண்பர்களும் திரை விமர்சகர்களும் இதை அப்படி எடுத்துக் கொள்ள கூடாது. எனக்கு இந்தியன் 3 படம் என்று ஒன்று இருப்பது தெரிந்துவிட்டது அதனால் நான் அதன் மேல் ஆர்வமாக இருக்கிறேன். முதலில் சாப்பிட்ட சாம்பார் நன்றாக இருந்தது. ரசமும் நன்றாக தான் இருந்தது. பாயாசத்தை நொக்கி என் மனம் ஓடுகிறது என்றால் அதற்கான என்மீது நீங்கள் கோபிக்கக் கூடாது.” என்று கமல் தெரிவித்துள்ளார்.