ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியாவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பலத்த வரவேற்புடன் படம் வெளியானது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளதோடு வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்தியில் மட்டுமே 400 கோடி வசூலை எட்டியுள்ள பதான் உலகளவில் சுமார் 780 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படம் உலக அளவிலான வசூலில் விரைவில் 1000 கோடி வசூலை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முறைகேடாக ஸ்க்ரீனிங் செய்யப்பட்ட பதான் :
இப்படி சாதனைகளை ஒரு புறம் எகிற வைக்கும் பதான் திரைப்படம் பாகிஸ்தானின் கராச்சியில் சட்டவிரோதமாக திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த திரையிடலை சிந்து திரைப்பட தணிக்கை வாரியம் தற்போது நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியானது. படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானில் சட்டவிரோத காட்சிகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சட்டவிரோதமான காரியத்தில் தற்போது சிந்து திரைப்பட தணிக்கை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கராச்சியில் உள்ள டிஃபென்ஸ் ஹவுசிங் ஆணையத்தில் நடைபெற்று வந்த இந்த காட்சிகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஷாருக்கான் நடிப்பில் தீபிகா படுகோன், டிம்பிள் கபாடியா, ஜான் ஆபிரகாம் மற்றும் அசுதோஷ் ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த ஸ்பை திரில்லர் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார் சல்மான் கான்.
அமோகமாக நடைபெற்ற ஆன்லைன் விற்பனை :
பாகிஸ்தானில் ஸ்கிரீனிங்கிற்கான டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பில் 900 ரூபாய்க்கு ஆன்லைனில் விற்கப்படுவதாக பாகிஸ்தான் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. ஃபயர்ஒர்க் ஈவென்ட்ஸ் இந்த பிரைவேட் ஸ்க்ரீனிங் வேலைகளை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிந்து திரைப்பட தணிக்கை வாரியத்தின் அறிக்கையின் படி " தணிக்கை குழுவின் சான்றிதழ் பெறப்படாத காட்சிகள் முறைகேடாக காட்சி படுத்தப்பட்டால் அதற்கு பொறுப்பானவர்கள் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.100,000 (பாகிஸ்தான் ரூபாய்) வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. உடனடியாக இந்த காட்சிகளை ரத்து செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.