இளையராஜா இல்லாவிட்டால் இசையுலகம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. 70களின் தொடக்கத்தை சற்று திரும்பிப்ப் பார்ப்போமாக. அப்போது தமிழகத்தின் கிராமத்தில் கூட மேரே சப்னோ கி ராணி கப்... என்று இந்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. ஏனோ இசைக்கு வந்த சோதனை என்று சொல்வது போல் தமிழ்ப்பட பாடல்கள் பெரும்பாலும் கொத்துபோட்டுக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு அல்லி மலர் போல் மலர்ந்து கொண்டிருந்தது.
இந்திப் படங்களின் ஆதிக்கத்தால் வீட்டில் பிள்ளைகளுக்குக் கூட சபானா, ராஜேஷ் கண்ணா, ரிஷி என்றெல்லாம் பெயர் வைக்க ஆரம்பித்தனர். இந்திப் படங்களை தமிழில் ரீமேக் செய்த சம்பவங்களும் கோலிவுட்டில் நடந்து கொண்டிருந்தன.
அப்போதுதான் பன்னைபுரத்து ராசய்யா அண்ணக்கிளிக்காக இசையமைக்கிறார். மச்சானைப் பார்த்தீங்களா என்று பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க ஆரம்பித்தது. அண்ணக்கிளி உன்னத் தேடுது என்று இளையராஜா இளம் நெஞ்சங்களை வருடிக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இளையராஜாவின் இசையில் கிறங்கியது. அந்தக் கிறக்கம் இன்றுவரை தெளியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இளையராஜா தமிழ் திரையுலகை ஒரு சிறு சறுக்கலில் இருந்து மீட்க உதவினார் என்றுகூட சொல்லலாம்.
இளையராஜா கோலோச்சிய காலத்திலேயே இன்னும் பல இசையமைப்பாளர்களும் வரத்தான் செய்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் வருகை வேறு விதமான இசைக்கு மக்களை பழக்கப்படுத்தியது. இனிமேல் ராஜா அவ்வளவு தான் என்று பேசியவர்களும் கூட இன்று காரில் நெடுந்தூர பயணம் செல்லும்போது இது மவுனமான நேரம் என்று ராஜாவின் இசைக்கு தான் முதல் சாய்ஸ் தருகின்றனர்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று காலங்களைக் கடந்து இசை படைத்துக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் இளையராஜா. இதைவிட என்ன வேண்டும் அவர் ட்ரெண்டில் தான் இருக்கிறார் என்பதைச் சொல்வதற்கு.
அப்போதெல்லாம் டேப் ரெக்கார்டர் தான் ரொம்ப ஃபேமஸ். பாட்டு கேசட்டுக்கு அப்போது அவ்வளவு மவுசு. படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட்டும் வரும், நாமாக வெத்து கேசட் வாங்கிக் கொடுத்து விரும்பிய பாடல்களை ரெக்கார்ட் செய்து கொள்ளவும் முடியும். எதிரெதிர் வீட்டிலிருந்த இளம் நெஞ்சங்கள் பல இணைய இசைஞானியின் பாட்டுக்கள் அடங்கிய கேசட்டுகளின் பறிமாற்றமும் உதவியிருக்கிறது.
காது குத்து தொடங்கி கல்யாணம் வரை லவுட் ஸ்பீக்கரில் இளையராஜா பாடல்கள் ஒலிக்காமல் இருக்காது. புத்தம் புது காலை என ஆரம்பித்து கண்ணே கலைமானே என்று முடிக்கும் ரசனைகொண்ட சவுண்ட் சர்வீஸ் அண்ணன்களும் இருந்த காலம்.
புன்னகை மன்னனில் புது ட்ரெண்ட் மியூசிக் என ஆரம்பித்து கவுதம் வாசுதேவ் மேனனின் நீ தானே என் பொன் வசந்தம் வரையிலும் பல்வேறு வெரைட்டி கொடுத்தவர் தான் இளையராஜா. நடிகர் மோகனுக்கு மைக் மோகன் என்று பெயர் வருமளவுக்கு அவருக்கான ஹிட் பாடல்களை களமிறக்கியவர்.
திருவாசகத்துக்கு உருகாதவர் ஒரு வாசகத்துக்கும் உருக மாட்டார் என்பார்கள். அந்த திருவாசகத்தை சிம்பொனியில் வடித்துக் கொடுத்து உருக வைத்தவர் தான் ராஜா. ராஜாவே தாலாட்டும் இரவுகளாகதான் இன்றைய எஃப்எம் இரவுகள் இருக்கின்றன. ராஜா எத்தனை சர்ச்சைகளுக்குள் சிக்கலாம். ஆனால் அவரை ஒரு குழந்தையை வாரி அணைத்துக் கொள்வதுபோலே தமிழ் சமூகம் அணைத்துக் கொள்ளும். இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தோடு சொல்ல ஒன்றே ஒன்று இருக்கிறது... நாதம் உன் ஜீவனே!!!