தென்னிந்திய சினிமாவின் பெருமை, பொக்கிஷம் என என்றென்றும் கொண்டாடப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவரின் இசைக்கு மயங்காதவர்கள் என யாரும் இருக்கவே முடியாது அந்த அளவுக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இசையால், குரலால் ஈர்த்தவர் இசையின் மேஸ்ட்ரோ இளையராஜா. 


 


இளையராஜா பயோபிக் :



அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் அவரின் பயணம், பெருமை, சாதனைகள் கடத்தப்பட வேண்டும் என்பதற்காக உருவாக உள்ளது இளையராஜாவின் பயோபிக். தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்க மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தை நடிகர் தனுஷ் ஏற்று நடிக்க கமல்ஹாசன் திரைக்கதையை எழுத உள்ளார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. 


 



இளையராஜாவின் இசை நிகழ்ச்சி :



இந்நிலையில் இளையராஜாவின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்று ஜூலை 14ம் தேதியன்று மாலை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. மெர்குரி நிறுவத்தினர் இந்த விழாவில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் இசைஞானியின் லைவ் கான்செர்ட் நடைபெற்றது என்பதால் திரளான மக்கள் இந்த இசை கச்சேரியில் கலந்து கொண்டனர். ஸ்வேதா மோகன், பாலகிருஷ்ணா உள்ளிட்ட ஏராளமான பிரபலமான பாடகர்களும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இளையராஜாவின் பல எவெர்க்ரீன் பாடல்கள் இந்த கச்சேரில் பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்பெஷல் ஹைலைட்டாக  ஹங்கேரி இசைகலைஞர்கள் பங்கேற்று இசை அமைந்தனர்.   


 


 






 


அப்போது பேசிய இளையராஜா "கிளாஸ் எடுக்குறேன் என நினைக்காதீங்க... என்னுடைய பயோபிக் படம் எடுக்கப்போறதா சொன்னாங்க. தனுஷ் கிட்ட எப்படி என்னுடைய பாடல்கள் உருவானது என்பது பற்றி எல்லாம் நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். ஆனா படத்துல அதெல்லாம் வருமான்னு எனக்கு தெரியாது. அது தான் உங்ககிட்ட அதை பகிர்ந்துக்கலாம் என நினச்சேன். இது எல்லாமே உங்களுக்காக தானே. நான் என்னோட மனசுல வைச்சுக்கிட்டு என்ன பண்ண போறேன்? எனக்குள்ள இருக்க விஷயங்களை உங்ககிட்ட சொல்லி நீங்க தெரிஞ்சுக்கிட்டா அதுல எனக்கு சந்தோஷம். நீங்க சந்தோஷமா இருக்கறதை பார்த்தாதானே எனக்கு சந்தோஷம்" என பேசியிருந்தார் இசைஞானி இளையராஜா.