தமிழ் சினிமாவின் இசைத்துறையில் மூத்த முன்னோடியாக அறியப்படுபவர் ‘இசைஞானி இளையராஜா’. அவர் தற்போது மாநிலங்களவை நியமின உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தப்பதவி அவருக்கு வழங்கப்பட்டதற்கு வாழ்த்துகள் ஒருபக்கம்  கொட்டிக்கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் விமர்சன கணைகளும் வந்து விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. 1000 படங்களுக்கு மேல் இசை, பத்ம விருதுகள், தற்போது எம்.பி என எண்ணிலடங்கா சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர் சர்ச்சைகளுக்கும் பேர் போனவர்தான். அப்படி அவர் கடந்த காலத்தில் சந்தித்த சில சர்ச்சைகளை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். 



ஆண்மையில்லாத்தனம் என விமர்சித்த இளையராஜா 


கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான  ‘96’ படத்தில் சில இடங்களில் இளையராஜாவின் பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இப்படி அவரது பாடல்களை தற்போது வரும் படங்களில் பயன்படுத்துவது குறித்து அவரிடம் கேட்ட போது, காட்டமாக பேசிய அவர், “ எங்கு அவர்களால் முடியவில்லையோ அந்த இடத்தில் புகழ்பெற்ற பாடலைத் திணிக்கிறார்கள். காரணம், அந்த இடத்திற்கு ஈடான பாடல்களை அவர்களால் தரமுடியாததுதான்”  என்று பேசினார்.


மேலும் பேசிய அவர், “கதையில் 1980-ல் உள்ள பாடல் என்றால் 80-களில் வெளியான பாடல்களுக்கு நிகரான பாடலையே இசையமைக்க வேண்டும். அதனால் என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துகிறீர்கள். அது ஆண்மையில்லாத்தனம்” என்று பேசினார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது. பலரும் தங்களது கண்டங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்தனர். 


பீப் சாங் கேள்வி - ஆவேசமடைந்த இளையராஜா 


சிலம்பரசன் பாடிய பீப் பாடல் எதிர்ப்புகளால் திக்குமுக்காடிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற‍ நிகழ்ச்சிக்கு வந்திருந்த இசைஞானி இளையராஜாவிடம் இந்த பிரச்சினை பற்றி ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். இதைக்கேட்டு சட்டென ஆவேசமடைந்த இளையராஜா, இந்த இடத்தில் இந்த கேள்வி அவசியமானதா?” உனக்கு அறிவு இருக்கா?  என்று சாடினார்..


உடனே சுதாரித்துக்கொண்ட நிருபர், அறிவு இருப்பதால்தான் உங்களில் கேள்வி கேட்கிறேன் என்று கூற.. என்ன.. உனக்கு அறிவு இருப்பதை எந்த அறிவை வைத்து கண்டுபிடிக்கிறாய் என்று கேட்டார்... தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்பட கடுப்பின் உச்சத்தில் அங்கிருந்து கிளம்பினார் இளையராஜா... அவரது அந்தப் பேச்சு திரைவட்டாராத்தில் பரபரப்பை கிளப்பியது. 


எஸ்.பி.பியும் இளையராஜாவும் 


தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நட்பு பாராட்டி வந்த இளையராஜா திடீரென, எஸ்.பி.பி தன்னுடைய அனுமதி இல்லாமல் தான் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என கூறி நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு அவரது சகோதரர் கங்கை அமரன் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.


பெரும் சர்ச்சையை கிளப்பிய பிரச்சினையை தொடர்ந்து, பேட்டியளித்த எஸ்.பி.பி, “ஒரு குடும்பத்தில் இருக்கிறவர்கள் இடையே சிறு மனஸ்தாபங்கள் வரும். பிறகு சரியாகி விடும். மீண்டும் இணைந்து விடுவார்கள். இளையராஜாவுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை சிறியதுதான். இருவரும் அதை மறந்து விட்டோம். உன்னை கட்டிப்பிடிக்கணும் போல் இருக்குடா? என்று இளையராஜா சொன்னார். உடனே போனேன் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். அதோடு எல்லா பிரச்சினையும் தீர்ந்து விட்டது.” என்று பேச.. அந்தப்பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. 


பிரசாத் ஸ்டியோவும் இளையராஜாவும்


40 ஆண்டுகளுக்கு மேலாக பிரசாத் ஸ்டுடியோ வளாகத்திலிருந்த இளையராஜா, அங்கிருந்து காலி செய்ய வேண்டும் என்று ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம்  இளையராஜா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இளையராஜா நீதிமன்றம் சென்றார்.


ஆனால் கடைசிவரை இளையராஜாவை பிரசாத் ஸ்டியோவிற்குள் அனுமதிக்காத பிரசாத் ஸ்டியோ அவரை அங்கிருந்து காலி செய்ய வைத்தது. இதனைத்தொடர்ந்து,  கோடம்பாக்கத்தில் உள்ள  எம்.எம். திரையரங்க வளாகத்தை விலைக்கு வாங்கி, புதிய ஸ்டியோவை கட்டினார்.


ஜெமினி ,நெப்டியூன் விஜயா கார்டன் ஸ்டூடியோக்கள் என காணாமல் போகின்ற வரிசையில் பிரசாத் ஸ்டூடியோவும் காணாமல் போகவேண்டுமென்று நான் அங்கிருந்து வந்துவிட்டேன். என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் இதனை வாங்கி துவங்கியுள்ளேன். இன்றைக்குள்ள நவீனத்துவமான அனைத்தும் இங்குள்ளன.”என்று பேசினார். இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டியோவிற்கும் இடையே நடந்த இந்த சர்ச்சை அப்போது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


 


மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா 


ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை இந்தாண்டு வெளியிட்டது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இளையராஜா “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.  சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.


முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.


அவரது இந்த முன்னுரை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது இந்தக்கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், இளையராஜா தன்னிடம் தெரிவித்ததாக கூறி, “ நான் தெரிவித்த கருத்தை அரசியலாக்க விரும்பவில்லை. மற்றவர்களுடைய கருத்து எந்த மாதிரியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இது என்னுடைய கருத்து. நான் இதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை” என்றார்.