இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாவதைக் குறித்து இயக்குநர் வெற்றிமாறனின் நெகிழ்ச்சியாக பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.


இசைஞானியாக தனுஷ்


இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராக்கி , சாணி காயிதம் , கேப்டன் மில்லர் உள்ளிட்டப் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் இசைஞானி இன்று சென்னையில் நடைபெற்றது.  இளையராஜா, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க தனக்கு இருந்த ஆசைப் பற்றி பேசினார். இந்தப் படம் குறித்தும் இசையமைப்பாளர் இளையராஜா பற்றியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் பேசினார். 


இளையராஜா இசை என்னுடைய அம்மா மாதிரி


”இளையராஜாவின் இசை அவரவர் வாழ்க்கையில் எந்த வகையில் தொடர்புடையது என்று மற்றவர்கள் பேசினார்கள். என்னைப் பொறுத்தவரை இளையராஜாவின் இசை என் அம்மாவின் அன்பு மாதிரி. அது எப்போதும் மாறாதது. தமிழ் சினிமாவில் இசை என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்துடனும் இணைந்து இருப்பது. சிறிய வயதில் எனக்கு மஞ்சள் காமாலை வந்திருந்தபோது நானும் என் நண்பனும் ராணிப்பேட்டையில் இருந்து பஸ் பிடித்து சென்னைக்கு வந்து தேவர் மகன் படம் பார்க்க வந்த நினைவு எனக்கு இருக்கிறது.


நான் ரொம்ப விரும்பிக் கேட்ட ஒரு படத்தின் பாடல் அந்த பாடல் உருவான கதை படமாகும்போது அதில் என் வரலாறும் கலந்திருப்பதை நான் பார்க்கிறேன்.   அதில் இளையராஜாவின் இசை என்பது தவிர்க்க முடியாதது. அப்படியான ஒரு மனிதரின் வாழ்க்கை படமாவது என்பது இந்திய சினிமாவின் முக்கியமான ஆவணமாக இருக்கும். தனது முழுவாழ்நாளில் தன்னுடைய இசையை வழங்கியிருக்கும் நபர் இளையராஜா. இந்தப் படத்தில் ராஜா சாரின் இசையைக் கேட்பதற்கு நான் ரொம்ப ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதே நேரத்தில் தனுஷுக்கும் இந்தப் படம் மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது. நிச்சயமாக எந்த சவாலைக் கொடுத்தாலும் தனுஷ் அதை செய்துவிடுவார். இந்தப் படத்தில் எதோ ஒரு வகையில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று நான் விருப்பப் படுகிறேன். எந்த வகையில் என்னால் உதவ முடிந்தாலும் நான் அதை செய்வேன். இந்தப் படக் குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ” என்று இந்தப் படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.