நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ள தியாகராஜன் தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் இயக்குனராகவும் உள்ளார். அவரது மகன் பிரசாந்த் 90களில் முன்னணி ஹீரோவாக பல வெள்ளிவிழா படங்களை கொடுத்துள்ளார் . வைகாசி பொறந்தாச்சு மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பிரசாந்த் அதை தொடர்ந்து தொட்டதெல்லாம் பொன் போல நடித்த அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது. 80 மற்றும் 90களில் பிரசாந்த் நடிப்பில் வெளியான அனைத்துத் திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற உச்சத்தில் இருந்த பிரசாந்த் ஒரு கட்டத்தில் சில குடும்பப் பிரச்சினைகள் காரணமாக திரைப்படங்களில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போனது.


சாக்லேட் பாயாக இருந்த பிரசாந்த் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்து ஆயுதம்,ஜாம்பவான்,தகப்பன்சாமி, என ஆக்சன் கதைகளில் நடிக்க தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு வெளியான அடைக்கலம் படத்திற்கு பிறகு பிரசாந்துக்கு எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. அதன்பிறகு 2011 ஆண்டு கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் பொன்னர் சங்கர் என்ற வரலாற்று சிறப்புமிக்க கதையில் பிரசாந்த் நடித்தார்.


மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தமிழர் வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக மிகவும் பின்தங்கியே இருந்தது. மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என தீவிரமாக இருக்கும் பிரசாந்த் மம்பட்டியான், புலன் விசாரணை 2, சாகசம், ஜானி ஆகிய படங்களில் நடித்து பார்த்தார் எதுவும் க்ளிக் ஆகவில்லை. அதனால் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற அந்ததுன் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி அந்தகன் என்னும் பெயரில்  பிரசாந்த் நடித்துள்ளார். தியாகராஜன் ஒரு பேட்டியில் ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.



மீண்டும் உங்களிடமிருந்து எப்போது பெரிய பிரேக் பார்க்கலாம் என்ற கேள்விக்கு, "தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறேன், அதில் ஒரு இந்திய மந்திரவாதியாக நடிக்கிறேன். அந்தகன் பட வெளியீட்டுக்கு பிறகு ஜூலையில் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறேன். அந்த திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் என் இத்தனை வருட கால சினிமா அனுபவத்திற்கு தீனி போடும் விதமாக இருக்கும்." என்றார். 


பிரஷாந்த் மிஸ் பண்ண ஏதாவது ஒரு படம் அவரு பண்ணிருந்தா நன்றாக இருக்குமென்று நினைத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, "ஃபிரெண்ட்ஸ் படத்துல விஜய் ரோல் பிரஷாந்த் பண்றதா இருந்துச்சு. சூர்யா ரோல் விஜய் பண்றதா இருந்துச்சு. அப்போ சில காரணங்களால பண்ண முடியல, ஆனால் இப்போ எனக்கு அது பண்ணிருக்கலாம்னு தோணுது." என்றவரிடம், தளபதி 66 இல் பிரஷாந்த் நடிப்பார் என்ற பேச்செல்லாம் அடிபட்டதே என்று கேட்கையில், "அப்போவே சேர்ந்து நடிக்க மாட்டோம்ன்னு சொல்லிட்டோம், இப்போ எப்படி நடிப்போம்", என்றார். 



இளையராஜாவுடனான நட்பு குறித்து பேசுகையில், அவருடைய சர்ச்சை பேச்சுக்கள் குறித்து கேட்கப்பட்டது, அப்போது, "அதெல்லாம் பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வரும். இளையராஜா எதையும் உள் அர்த்தத்தோடு பேச மாட்டார். உலகம் தெரியாதவர் அவர். இசை இசை என அற்பணிப்போடு இருந்ததால் வேறெது குறித்தும் அவருக்கு தெரிவதில்லை. சர்ச்சைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். அவருடன் பழகியதை வைத்து சொல்கிறேன், மிகவும் ஜாலியான மனிதர் அவர். நாங்கள் வெளியெல்லாம் செல்லும்போது அவ்வளவு சிரிப்பாக பேசிக்கொண்டே வருவார். இந்த ஜலபுலஜங்கு, ஜில்பி, டிக்கிலோனாலாம் நாங்க கண்டு புடிச்ச வார்த்தைகள்தான்," என்றார்.