புற்று நோயினால் உயிரிழந்த பாடகி பவதாரிணியின் உடலுக்கு பவதாரிணியின் தந்தையும் இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா தனது கடைசி அஞ்சலியை செலுத்தினார். தேனி பண்ணைப்புரத்தில் வைக்கப்பட்டுள்ள பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அவரது உடலுக்கு திருவாசகம் பாடி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது ஒட்டுமொத்த இளையராஜா குடும்பமும் கலங்கி நின்றது. இதுமட்டும் இல்லாமல்  கண்களின் கண்ணீருடன் பவதாரிணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜாவைப் பார்க்கும்போது அங்கு இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. 






இளையராஜா நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், தனது மகள் சிறுவயதில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அன்பு மகளே என குறிப்பிட்டிருந்தார். இது அவரது துயரத்தின் உச்சம் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் பாரதிராஜா, கதறி அழுதபடி பவதாரிணியின் உடலை பார்த்துக்கொண்டு இருந்தார். அதன் பின்னர் அவர் தனது நண்பரான இளையராஜாவைப் பார்க்கும்போது உடைந்து அழுததும், அதன் பின்னர் இளையராஜாவின் கரங்களை பற்றிகொண்டு தனது வருத்ததை தெரிவித்தது அங்கு கூடியிருந்த அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தது.