Kerala Governor: கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கொல்லம் பகுதியில்  தன்னை முற்றுகையிட வந்த போராட்டக்காரர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு, போராட்டக்காரர்கள் அனைவரயும் கைது செய்ய வேண்டும் என காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளார். அதுவரை இங்கு இருந்து செல்லப்போவதில்லை என, தேநீர் கடை ஒன்றின் வளாகத்தில் நாற்காலியில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டுள்ளார்.






ஆளுநருக்கு கருப்புகொடி:


நிலமெல் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இடதுசாரி கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ பிரிவைச் சேர்ந்த நபர்கள் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டினர். அவருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பி காரை நோக்கி வந்தனர். அப்போது காரை நிறுத்தி வெளியே இறங்கி வந்த ஆளுநர், போராட்டக்காரர்களை நோக்கி வேகமாக சென்றார். உடனடியாக போலீசார் அங்கு குவிய, போராட்டக்காரர்களை ஏன் கைது செய்யவில்லை. அவர்களை உடனடியாக கைது செய்யுங்கள் என வலியுறுத்தினார். காவல்துறையினரும் உடனடியாக செயல்பட்டு போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனாலும், ஆளுநர் அங்கு இருந்து செல்ல மறுப்பு தெரிவிவித்து விட்டார்.






ஆளுநர் தர்ணா:


போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யாததை கண்டித்து, சாலையோரம் இருந்த தேநீர் கடைக்கு சென்று, அதன் வளாகத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். சட்டவிதிகளை மீறி செயல்படும் போராட்டக்காரர்களை போலீசாரே கைது செய்யாவிட்டால், வேறு யார் தான் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவார்கள். போராட்டக்காரர்களுக்கு காவல்துறையே பாதுகாப்பு அளிக்கிறது. அவர்களை கைது செய்யும் வரை நான் இங்கு இருந்து செல்ல மாட்டேன் என ஆளுநர் கூறினார். இதையடுத்து, காவல்துறையினர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 12 பேரை விசாரணைக் காவலில் எடுத்துள்ளதாக கூறினாலும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தி வருகிறார்.


போராட்டம் ஏன்?


ஆளுநருக்கு எதிரான எஸ்எஃப்ஐ அமைப்பினரின் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகவே நடைபெற்று வருகிறது. மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்களை விடுத்து, தன்னிச்சையாக பாஜக ஆதரவாளர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக ஆளுநர் நியமித்து வருவதாக  எஸ்எஃப்ஐ அமைப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது. அதோடு, மாநில அரசுக்கும் ஆளுநருடன் மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.