பிரபல பின்னணி பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி திரையுலகினரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள்,ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இசைஞானியின் வாரிசு
இசைஞானியின் இளையராஜாவின் மகளான பவதாரிணி, பிரபல பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தார். தனித்துவமான குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட அவர் தனது 47வது வயதில் கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இந்த பிரச்சினைக்காக இலங்கைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்றிருந்த அவர், அது பலனிக்காமால் நேற்று காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.
நடிகை சிம்ரன்
பவதாரிணியின் மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். இக்கட்டான நேரத்தில் இளையராஜாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். பவதாரணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் - நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் சிலம்பரசன்
உங்களின் அப்பாவித்தனத்திற்காகவும், அன்பிற்காகவும் மக்கள் இதயத்தில் என்றும் வாழும் குரல்! நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள்! சீக்கிரம் சென்றுவிட்டார்! இந்த தருணத்தில் இளையராஜா சார் மற்றும் எனது சகோதரரின் யுவன் குடும்பத்தினருக்கு வலிமை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நிம்மதியாக இருங்கள் பவதாரிணி.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
பவதாரிணியின் மரண செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், சோகமும் அடைந்தேன். இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
நடிகை ஷனம் ஷெட்டி
தேவதை குரல் கொண்ட பெண் சீக்கிரம் சென்று விட்டாள். இளையராஜா குடும்பத்தினருக்கும், பவதாரிணி ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
நடிகை வனிதா விஜயகுமார்
பவதாரினி நீ என் தோழி அல்ல.. நீ சகோதரி அல்ல.. நீ யார் என்று உனக்கு தெரியும்... நமக்கான உறவு குறித்து என்றென்றும் பகிர்ந்துகொண்டு ஒரு நாள் சந்திப்போம்... என் அன்பை ஜீவா அம்மாவுக்குக் கொடுங்கள், நான் அவரை எப்போதும் தவறவிடுகிறேன். நீ எப்பொழுதும் கடவுளின் குழந்தை .. மரண செய்தி கேட்டு நான் உடைந்து நொறுங்கி போய்விட்டேன், என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீ என் முதல் பாடலைப் பாடினாய் இன்னும் பல .. நாம் பகிர்ந்து கொள்ளும் சிறுவயது உறவு நான் உன்னை மீண்டும் சந்திக்கும் வரை என்னை வேட்டையாடும். நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.