எக்கோ (Echo Recording Company Private Limited ) மற்றும் அகி இசை ரெக்கார்டிங் நிறுவனங்கள் காப்புரிமை முடிந்த பிறகும், பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 2-வது வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. 


வழக்குத் தொடர்ந்த இளையராஜா:


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் 4,500 பாடல்களை பயன்படுத்த எக்கோ நிறுவனமும், அகி என்ற இசை நிறுவனமும் முன்னதாக ஒப்பந்தம் செய்திருந்தது. ஒப்பந்தம் காலம் முடித்த பிறகும், காப்புரிமை பெறாமல் பாடல்களை இரண்டு நிறுவனங்களும் பயன்படுத்தி வருவதாக ஆட்சேபனை தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்ததோடு மட்டுமல்லாமல் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. பாடல்களை இசை நிறுவனம் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. 


இளையராஜா எல்லாருக்கும் மேலானவர் அல்ல:


ஆனால் பாடல்களுக்கான காப்புரிமை தயாரிப்பாளரிடம் உள்ளதால், ஒப்பந்தம் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாக எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த விசாரணையில் இசை நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “இளையராஜா எல்லாருக்கும் மேலானவர் என தன்னை நினைக்கிறார்” என கருத்து தெரிவித்தார். 


ஆனால் வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இதற்கு பதிலளித்த நீதிபதி மகாதேவன், ‘முத்துசாமி தீட்சிதர், தியாகராஜர், சியாமா சாஸ்திரி ஆகிய இசை மும்மூர்த்திகள் தான் எல்லோருக்கும் மேலானவர்கள். ஆனால் இளையராஜா விஷயத்தை இந்த கருத்தை கூற முடியாது’ என தெரிவித்திருந்தார். வழக்கு ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னாகும்?


நீதிபதிகள் ஆர் மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அமர்வில் இன்று (24.04.2024) விசாரணைக்கு வந்தது. எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விட்டதால் அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும் என்று தெரிவித்திருக்கிறார். இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் இசையமைப்பு என்பது க்ரியேடிவ் பணி என்பதால் காப்புரிமைச் சட்டம் பொருந்தாது என்று தெரிவித்திருக்கிறார். 


இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்.” அப்படி என்றால் பாடல் வரிகள் பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்குப் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என்று கேள்வியெழுப்பினர். 


விசாரணை ஒத்திவைப்பு:


இந்த வழக்கின் விசாரணை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள் பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது இறுதித் தீர்வுக்குப் கட்டுப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர்.