தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் ரஜினிகாந்துக்கு நல்ல ஒரு கம் பேக் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மோஸ்ட் வான்டட் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'தலைவர் 171' படத்தின் மூலம் முதல் முறையாக கூட்டணி சேர உள்ளனர். சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு 'கூலி' என தலைப்பிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டைட்டில் டீசருடன் ‘தலைவர் 171’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தற்போது ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். விரைவில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் குறித்த அப்டேட்களை ஒவ்வொன்றாக வெளியிடுவது லோகேஷ் கனகராஜ் ஸ்டைல். அந்த வகையில் மாநகரம் படத்தில் அவருடன் கூட்டணி சேர்ந்து திரைக்கதை மற்றும் வசனம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட சந்துரு அன்பழகன் 'கூலி' படத்தின் மூலம் மீண்டும் கூட்டணி சேர உள்ளனர் என்ற தகவல் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்தின் வசனங்களை சந்துரு அன்பழகன் தான் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'தலைவர் 171' குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி ஒன்றில் கூறிய தகவல் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. ரஜினி சாருடன் லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் கதை எனக்குத் தெரியும். எட்டு முதல் பத்து பேருக்கு அந்தப் படத்தின் கதை பற்றி தெரியும். கோவிட் சமயத்தில் ஒரு சில இயக்குநர்கள் வீடியோ கால் அல்லது ஜூம் மீட் மூலம் வாரத்திற்கு ஒரு முறை சந்தித்து பேசிக் கொள்வோம்.
லாக் டவுன் முடிந்த பிறகு அனைவரும் நேரடியாக அவரவர்களின் ஆபீஸ் அல்லது வீட்டில் சந்தித்து பேசி கொள்வோம். அந்த சமயத்தில் தான் லோகேஷ் பற்றி எனக்கு நிறைய விஷயங்கள் தெரிய வந்தது. எங்களின் படங்கள் பற்றி நாங்கள் பரிமாறிக்கொள்வோம். அந்த சமயத்தில் தான் அவர் 'கூலி' படத்தின் கதையை எங்களுக்கு சொன்னார். எனவே அவர் 10 படங்களோடு இல்லாமல் 100 படங்கள் எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனப் பேசி இருந்தார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.