இளையராஜா, இந்த ஒற்றை சொல் எத்தனை படங்களுக்கு உயிர்நாடியாய் இருந்துள்ளது என்பதை தமிழ் சினிமா அறியும். இந்தியாவின் ஆகச்சிறந்த இசை மேதையாக இன்றளவும் வலம் வந்து கொண்டிருப்பவருக்கு, அவரோடு சேர்ந்து வளர்ந்தது சர்ச்சைகளும்தான். இன்று நேற்று சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் அல்ல இளையராஜா. மணி ரத்னம், வைரமுத்து, பாலச்சந்தர் தொடங்கி ரஜினி, கமல் வரை நீண்டது அவருடைய சண்டை.
இயக்குநர்களுடன் சண்டை
இயக்குனர் மணிரத்தினம் கோபித்துக்கொண்டு சென்றதால்தான் இளையராஜாவின் அசிஸ்டண்ட் ஆன ஏ.ஆர் ராகுமானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்ற கதை உண்டு. வைரமுத்து எனும் மாபெரும் கவிஞன் அறிமுகமாகி நான்கு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் அதன்பிறகு ஏ ஆர் ரகுமான் வந்தபிறகுதான் உச்சம் தொட்டார் என்றும் கூறுவார்கள். பாலச்சந்தருக்கு ஆரம்பம் முதலே இளையராஜாவோடு ஏதோ பிரச்சனை இருந்துள்ளதாக கூறுவார்கள் கடைசி வரை அவரோடு இணையவே இல்லை.
பாக்யராஜ் உடன் ஒரு கசப்பான சம்பவம் நடக்க ஈகோ காரணமாக பல நாள் இணையாமல் இருந்தனராம். அதற்காகவே இசை கற்று தானே இசையமைத்தவர் பாக்யராஜ். அந்த நேரத்தில் இளையராஜா பெயர் இல்லாமலும் வெற்றிப்படங்கள் கொடுத்த இரண்டாவது ஆள் பாக்யராஜ், முதலாவது டி ராஜேந்தர்.
நடிகர்களுடன் கருத்து வேறுபாடு
தான் இசைக்கும் இசையை பிடிக்கவில்லை மாற்றுங்கள் என்று கூறுவதை விரும்பாதவர் இளையராஜா. அப்படி கூறிய ஒரே ஒரு நடிகருடன் மீண்டும் பேசினார் என்றால் அது கமல்ஹாசன் மட்டும்தான். ரஜினி ஒரு முறை வீரா படத்தில் ஒரு பாடல் பிடிக்கவில்லை என்று கூறியதாக பிரிந்ததாக ஒரு கதை உண்டு. அதன் பிறகு இணையாத இருவரும் சமீபத்தில் அடிக்கடி சந்திப்பதாக படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அரசியல் பிரச்சனைகள்
பொதுவாக வெளி மேடைகளிலோ, பேட்டிகளிலோ அரசியல் பேசாதவர இளையராஜா. அவருடைய பாடல்கள் உழைக்கும் வர்க்கத்தினருடையதாகவும், அவர் இசை வளர்ந்தது கம்யூனிஸ்ட் மேடைகளில் என்றும் பேச்சு உண்டு. அவர் மீது எத்தனை விமர்சனங்கள் வைத்தாலும் தன் வெற்றியின் மூலம் மட்டுமே பதிலளித்து வந்தவர் அவர்.
பேட்டி சர்ச்சைகள்
இளையராஜா முன்பு மைக்கை எடுத்து வைத்தால் வைரல் கண்டெண்ட் ரெடி என்பதுதான் தற்போதைய நிலவரம். சாதாரணமாக மிகவும் கோபப்படக்கூடிய அவர் செய்தியாளர்கள் நேர்காணலில் வரம்பு மீறி பேசியதை நாம் கண்டுள்ளோம். ஒரு செய்தியாளரை 'உனக்கு அறிவிருக்கா, இருந்தா காட்டு?' என்று கேட்டது தொடங்கி 96 திரைப்பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிற்கு ஆண்மை இருக்கிறதா என்று கேட்டது வரை அவரது ரசிகர்களாலேயே சகித்து கொள்ள முடியாத வரம்பு மீறல் வார்த்தைகளாக இருந்தது. அதை தாண்டி அத்தனை பேர் கூடி இருக்கும் இசை கான்செர்ட் மேடையில், தண்ணீர் கொடுக்க வந்த பணி செய்பவரை கூப்பிட்டு திட்டியதெல்லாம் உச்சகட்ட வெறுப்பிற்கு உள்ளாக்கியது. எவ்வளவு நடந்தும் அவரது இசை மக்களை கட்டிப்போட்டுதான் இருந்தது.
அம்பேத்கரும் மோடியும்
'அம்பேத்கரும் மோடியும்’ என்ற நூலில் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை எழுதியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் இளையராஜா சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், “இளையராஜா எழுதிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டார்” என்று இளையராஜா சொன்னதாக தெரிவித்திருந்தார். இந்த பிரச்சனை தமிழகத்தில் பூதாகரமாக வெடித்தது. இதனை தொடர்ந்து இளையராஜா கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பேசு பொருளாக இருந்தார்.
இவ்வளவு நடந்த போதிலும் இன்றும், நம் மாலை தேநீரை, ஒரு சிறு மழையை, ஒரு நீண்ட பயணத்தை இன்னமும் அழகாக்க இளையராஜாவே துணை புரிகிறார். அவர் மீது எவ்வளவு விமர்சனங்கள் வீழ்ந்தாலும், அவர் அன்றி வேறு தஞ்சம் நமக்கில்லை என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தி வருகிறார். 80 வயதை கடந்த ஞானி!