ஜேஇஇ மெயின் எனப்படும் முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் திருத்தங்களை மேற்கொள்ள இன்றே (டிச.8) கடைசித் தேதி ஆகும்.


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.


டிசம்பர் 4 வரை விண்ணப்பப் பதிவு


ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு நவ. 2ஆம் தேதி முதல் தொடங்கியது. மாணவர்கள் டிசம்பர் 4ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.


இதைத் தொடர்ந்து டிசம்பர் 6ஆம் தேதி விண்ணப்பங்களைத் திருத்துவதற்கான அவகாசம் தொடங்கியது.  மாணவர்கள் இன்று (டிச.8) இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதில் எல்லாம் திருத்தம் செய்யலாம்?



  • 10ஆம் வகுப்பு தொடர்பான தகவல்கள்

  • 12ஆம் வகுப்பு தொடர்பான தகவல்கள்

  • பிறந்த தேதி

  • பாலினம்

  • பிரிவு

  • கையெழுத்து

  • எந்தத் தாளை (Paper) எழுதலாம் என்ற தகவலை சேர்த்துக் கொள்ளலாம்.

  • நிரந்தர மற்றும் தற்காலிக முகவரியை அடிப்படையாகக் கொண்டு, தேர்வு மையத்தைத் தேர்வு செய்தல் மற்றும் தேர்வு மொழி ஆகியவற்றில் மாற்றம் செய்ய முடியும்.


ஏதேனும் ஒன்றில் மட்டுமே திருத்தம்


கீழே குறிப்பிடப்படும் மூன்று தகவல்களில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே திருத்தம் செய்ய முடியும். தேர்வரின் பெயர் அல்லது தந்தையின் பெயர் அல்லது தாயின் பெயர்.


கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டி இருக்கும் பட்சத்தில், பணத்தைச் செலுத்திய பிறகு மட்டுமே விண்ணப்பத்தில் திருத்தத்தை மேற்கொள்ள முடியும்.


ஒரேயொரு முறை மட்டுமே தேர்வர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய முடியும் என்பதால், கவனமாக தேவைப்படும் பகுதிகளில் திருத்தம் செய்து, சப்மிட் கொடுக்க வேண்டும்.


எதிலெல்லாம் திருத்தம் செய்ய முடியாது?


* கைபேசி எண்


* மின்னஞ்சல் முகவரி


* முகவரி (நிரந்தர மற்றும் தற்போதைய முகவரி)


* அவசர தொடர்பு விவரங்கள்


* அமர்வு (Session)


* தேர்வரின் புகைப்படம்


விரிவான விவரங்களுக்கு: https://jeemain.nta.ac.in/images/Public%20Notice%20for%20Correction%20JEE%20(Main)%20-%202024.pdf


12 மொழிகளில் தேர்வு எழுதலாம்


JEE Main நுழைவுத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய 12 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மொழிகள் தாண்டி பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. 


கூடுதல் விவரங்களுக்கு: https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.