• எந்த நேரத்திலும் புத்துணர்வு வேண்டுமா, காதலில் நீச்சலடிக்க வேண்டுமா, சோகத்தை மறக்க வேண்டுமா, உற்சாகத்தில் மிதக்க வேண்டுமா, கடவுளை ஆராதிக்க வேண்டுமா, இயற்கையை ரசிக்க வேண்டுமா, தாயின் தாலாட்டை மீண்டும் கேட்க வேண்டுமா… இதுபோன்ற எத்தனை, எத்தனை ஆயிரம் கோரிக்கைகள் இருந்தாலும், அனைத்திற்கும் ஒரே நிவாரணி – இளையராஜாவின் இசை. 




• தேனி மாவட்டத்தின் குக்கிராமத்தின் சின்னத்தாயி, ஓர் தீர்க்கதரிசி. தமது மகன், இசையால் மக்கள் மனதில் என்றும் இளமையுடன்  ராஜாவாக வாழ்ந்துக் கொண்டிருப்பான் என்பதை எண்ணித்தான், அவருக்கு இளையராஜா என பெயர் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். பண்ணைப்புரம் என்ற தனது கிராமத்திற்கு சர்வதேசஅளவில் அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த முகவரி இளையராஜா.


• அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் திரைஇசைப் பயணம், இன்று வரை மலைகளை, சமுத்திரங்களைக் கடந்து வளி மண்டலம் முழுவதும் நிறைந்து பரந்திருக்கிறது. 


• விருதுகளே பொறமைப்படும் அளவுக்கு விருதுகளின் மன்னனான இளையராஜாவை, அடுத்து அலங்கரிக்கப்போவது பாரதரத்னா என்றாலும் புகழ்ச்சி இல்லை.


• 80-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இளையராஜாவுக்கு, எங்கெங்கு காணினும் வாழ்த்துமழைதான். அதேபோல், அவரது இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த வந்தவர்கள், அதிலிருந்து மீளவே இல்லை.. அனைவரும் இசைநீரில் மூழ்கி, தினமும் முத்து எடுக்கின்றனர் என்றால் மிகை இல்லை.




• தாயின் தாலாட்டுகூட 5 ஆண்டுகள் வரைதான். ஆனால், இளையராஜாவின் தாலாட்டில் இந்த தமிழ்க்கூறும் நல்லுலகம் 45 ஆண்டுகளாக இளைப்பாறுகிறது என்பது, இசையே கண்டிராத அதிசயம் என்று சிலர்  பாடினாலும் ஆச்சர்யம் இல்லை. 


• தாயாக, தந்தையாக, குழந்தையாக, நண்பனாக, மனநோய் தீர்க்கும் மருத்துவராக, ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ரூபத்தில் நம்மோடு பின்னிப் பிணைந்திருப்பது இளையராஜாவின் இசை என்பதால், அவரை நம் உடன்பிறப்பு என்றாலும் தவறு இல்லை.


• இசை என்பது பொதுச்சொத்து, ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொரு மேதைகள் உருவாகி, மக்களை மகிழ்விப்பார்கள். ஆனால், காலங்களைக் கடந்து, ஒருசிலர்தான் நிற்பார்கள். அந்த வகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக துருவ நட்சத்திரமாக ஜொலிக்கும் இளையராஜா, இசை ராஜாக்களின் சாம்ராஜ்யத்தில் ஒரு  சக்கரவர்த்தி என்றால் தப்பு இல்லை.



• இசைக்கு மொழியில்லை என்பார்கள் - ஆனால், இசையின் மூலம் தமிழை அண்டை தேசங்களிலும் பேச வைத்தவர்கள் பட்டியலில் தலைமகன் இளையராஜா என்பதற்கு மறுகேள்வி இல்லை.




• மனுஷன் போய்  ரோபோ வந்திடுச்சு. ஆனா, சில விஷயங்கள் எந்தக்காலத்திலேயும் மாறாது என்பார்கள். அப்படித்தான், இளையராஜாவுக்கு நிகர், இளையராஜாவின் அடுத்த படைப்புதான் என்று சொல்வதிலும் கர்வம் ஏதும் இல்லை.


• நம் மனதின் நிலைமைக்கு ஏற்ப நவரசங்கள் நிறைந்த மாய உலகிற்கு அழைத்துச்செல்லும் இசை ஜாம்பவான்களின் வரிசையில், இளையராஜா எப்போதுமே சூப்பர்ஸ்டார். 


• இசை என்பது உலகில் இருக்கும் வரை இளையராஜாவின் இசையும் உலகில் இருக்கும் என்று சொல்வதில் ஒரு போதும் தவறு இல்லை. இல்லை. இல்லை.