தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் விஜய் விலகவுள்ள நிலையில் இனிமேல் கோலிவுட் நிலவரம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. 


தமிழ் சினிமாவும் அரசியலும்


தமிழ் சினிமாவுக்கு, தமிழ்நாட்டின் அரசியலுக்கும் நீண்ட நெடிய தொடர்புண்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர்களும் சரி, முக்கிய நடிகர்களாக திகழ்ந்தவர்களும் சரி அரசியலிலும் கால் பதித்துள்ளார்கள். எம்.ஜிஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விஜயகாந்த், மன்சூர் அலிகான், கார்த்திக், பாக்யராஜ், சரத்குமார், கருணாஸ், டி.ராஜேந்தர் ஆகியோர் தனியாகவே கட்சி தொடங்கிய சம்பவங்களும் உண்டு. 


இப்படியான நிலையில் தமிழ் சினிமாவின் நிகழ்கால சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்த நிலையில் திடீரென அதனை கைவிடும் முடிவுக்கு சென்று ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கினார். இப்படியான நிலையில் நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரும் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கி விட்டார். இன்னும் 2 படங்கள் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் நிலை?


இப்படியான நிலையில் இப்போது தான் தமிழ் சினிமா, இந்திய திரையுலகின் மற்ற மொழி திரையுலகத்திற்கு சவால் விடும் வகையில் தொழில்நுட்பத்திலும், வசூலிலும் வளர்ந்து வருகிறது. ரஜினிகாந்த், விஜய் படங்கள் வசூலில் ரூ.600 கோடியை எட்டும் நிலைக்கு கடந்தாண்டு வந்து விட்டது. இப்படியான நிலையில் விஜய் சினிமாவுலகில் இருந்து விலகுவதால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


ஏற்கனவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய 4 பேரின் பெயர்கள் தான் முதலில் வரும். இதில் கமல்ஹாசன் அரசியல், சினிமா என இரண்டு துறைகளையும் சமாளித்து செயல்பட்டு வருகிறார். ரஜினியோ அரசியல் வருகையில் இருந்து விலகிய அப்புறம் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். ஆனால் வயதுக்கேற்ற கேரக்டர்களை அடிப்படையாக கொண்டு அதில் தன்னால் முடிந்த அளவு ஸ்டைல் காட்டி வருகிறார். வசூலிலும் அவரது நிலை சற்றும் குறையவில்லை என்பது உண்மை தான். 


அதேசமயம் அனைவரையும் கவர்ந்த நடிகர் லிஸ்ட்டில் நடிகர் விஜய் பெயர் தான் முன்னணியில் உள்ளது. அஜித் படங்களில் நடித்தாலும் அதனை விட தனது பைக் சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் தான் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் கிட்டதட்ட இந்த 4 நடிகர்களின் சகாப்தமும் முடிவுக்கு வந்து விட்டது என்றே சொல்லலாம். இன்னும் சில காலத்துக்கு கண்டிப்பாக தமிழ் சினிமா வசூலில் அடிவாங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 


வளர்ந்து வரும் நடிகர்கள் இப்போது தான் ரூ.100 கோடி வசூல் என்ற நிலையை எட்டியுள்ள நிலையில் இவர்கள் ரஜினி, விஜய் போன்றவர்களின் படங்களின் சாதனையை எட்டிப்பிடிக்க இன்னும் பல காலம் ஆகலாம். ஆக, முன்னணி நடிகர்களின் பங்களிப்பு இல்லாமல் எதிர்கால சினிமா எப்படி இருக்கும் என்பதை யாராலும் கற்பனை பண்ணக்கூட முடியவில்லை.