டி20 ஓவர் வருகைக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் விறுவிறுப்பு குறைந்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு என்று இருக்கும் ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருந்தாலும், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியிலும் டெஸ்ட் போட்டிகளை கொண்டு செல்வதற்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு உலகக்கோப்பையை நடத்துவது போல டெஸ்ட் போட்டிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது.

அசத்தலாக முன்னேறிய வங்கதேசம்:


முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஆஸ்திரேலியாவும் கைப்பற்றிய நிலையில் 2023-2025ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி புது வரலாறு படைத்துள்ளது. இதனால், ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான டெஸ்ட் தரவரிசையில் வங்கதேசம் அணி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வங்கதேசம் அணி 6 போட்டிகளில் 33 புள்ளிகளுடன் 45.83 சதவீதத்துடன் 4வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட்  இண்டீஸ் அணிகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது.

முதலிடத்தில் இந்தியா:


தற்போதைய நிலவரப்படி, ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.



  • 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 74 புள்ளிகளுடன் 68.52 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

  • ஆஸ்திரேலிய அணி 62. 50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

  • நியூசிலாந்து அணி 50 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது.

  • வங்கதேசம் அணி 4வது இடத்தில் உள்ள நிலையில், இங்கிலாந்து 45 சதவீத புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

  • தென்னாப்பிரிக்க அணி 38.89 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

  • இலங்கை அணி 33.33 சதவீத புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

  • வங்கதேசத்திடம் தொடரை பறிகொடுத்த பாகிஸ்தான் 19.05 சதவீத புள்ளிகளுடன் 8வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.52 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.


வங்கதேசம் அணி அடுத்தடுத்து நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் இன்னும் வலுவான இடத்தைப் பிடிக்க முடியும். வங்கதேசம் அணி அடுத்து இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.