தமிழ் சினிமாக்களில் பல காட்சிகள் உண்மைக்கு சாத்தியம் இல்லாமல், லாஜிக் மீறல்களுடன் இடம்பெற்றிருக்கும் அவற்றை விமர்சகர்களும், மீம் கிரியேட்டர்களும் கலாய்ப்பது சகஜம். அவர்களுக்கு ஏற்றவாறு கன்டென்ட் கொடுப்பதற்கென்றே மாதம் ஒரு கமர்சியல் மாஸ் மசாலா படம் தமிழ் சினிமாவில் தவறாமல் வந்துவிடும். அப்படி ஒரு காட்சியை ஐஏஎஸ் சுப்ரியா சாஹூ கலாய்த்து ஒரு ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளரான சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் ட்விட்டரில் விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து 2018ல் வெளியான சாமி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் இருந்து ஒரு 24 செகண்ட் க்ளிப் இடம்பெற்றுள்ளது. 



அந்த வீடியோவில் விக்ரம் எப்படி காவல்துறை அதிகாரி ஆனார் என்னும் கதையை சொல்வதாக இயக்குனர் ஹரியின் பிரத்யேக ஸ்டைலில் ஒரு ஃபிளாஷ் பேக் வரும். அதில் அவர் லால் பகதூர் சாஸ்த்ரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் அலுவலகத்தில் சல்யூட் அடித்துவிட்டு நின்றுகொண்டிருப்பார். அப்போது அங்குள்ள அதிகாரிகள் அவரிடம் அவர் பெயர் ராமசாமியா என்று ஆங்கிலத்தில் கேட்பார்கள். விக்ரம் ஆமாம் என்று பதில் சொல்ல, உங்கள் தந்தை பெயர் ஆறுச்சாமியா என்று கேட்பார்கள். அதற்கு ஒரு தடபுடலான பின்னணி இசையுடன் கேமரா விக்ரமை சுற்றி சுற்றி காட்டும். சாமி படத்தின் முதல் பாகத்தை நினைவு கூறும் இந்த காட்சியில் அடுத்ததாக, ஆமாம் என்றதும், நீங்கள் முதல் கேட்டகிரியில் செலக்ட் ஆகி இருக்கிறீர்கள், ஐஎப்எஸ், ஐஏஎஸ், ஐஆர்எஸ், ஐபிஎஸ் இதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் என்று சொல்வார்கள். உடனே விக்ரம் ஐபிஎஸ் என்று கூறுவார். உடனே ஐபிஎஸ் என்று சீல் குத்தி அனுப்பி விடுவார்கள். இப்படி இடம்பெற்றிருக்கும் இந்த காட்சியை பகிர்ந்த சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் "லால் பகதூர் சாஸ்த்ரி நேஷனல் அகாடமியில் அலுவலர்கள் தேர்வு இப்படி தான் நடக்கும் என்பது எனக்கு இப்போது தான் தெரிகிறது" என்று சர்காஸ்டிக்காக பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில் ளால் பகதூர் சாஸ்த்ரி அலுவலக அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்தவர் வெங்கடாச்சலம். இவர் மீது பல்வேறு புகார்கள் குவிந்த நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளராக பதவி வகித்து வரும் சுப்ரியா சாஹூவிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






1991ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர் சுப்ரியா சாஹூ. மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் வேலூர் மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராகவும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். ஜூலை 2016 முதல் செப்டம்பர் 2017 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பொது இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். ஆசிய பசுபிக் ஒளிபரப்புத்துறை யூனியனின் (ABU) துணைத்தலைவராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். பின்னர் இதன் செயல் தலைவராகவும் பதவி வகித்தார். தற்போது INDCOSERVE சி.இ.ஓவாக பணியாற்றி வருகிறார். மேலும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இயற்கை மீதும் விலங்குகள் மீதும் ஆர்வம் கொண்டவர். நீலகிரியில் அடிபட்ட யானை ஒன்றிற்கு சிகிச்சை நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டது பலரையும் ஈர்த்தது. இயற்கையை நேசிக்கும், பாதுகாக்க வேண்டிய விஷயங்கள் தனது சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருவதுடன், அதுதொடர்பான செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.