சின்னத்திரை நயன்தாரா என கொண்டாடப்படுபவர் வாணி போஜன். பொதுவாக சின்னத்திரையில் நடித்தால் வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெறுவது கடினம். அதிலும் நாயகியாகவோ, நாயகனாகவோ நடிக்கவே முடியாது என இருந்த காலக்கட்டம் தற்போது மெல்ல மெல்ல மாற தொடங்கியிருக்கிறது. வாணி போஜன் போலவே சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றனர். வாணி போஜன் திருமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் . ஓ மை கடவுளே திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு மகான் திரைப்படத்திலும் , விக்ரமிற்கு இரண்டாம் பாதியில் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் கதையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக அவரது காட்சிகளை மட்டும் நீக்க வேண்டியதாகிவிட்டது என இயக்குநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வாணி போஜனை பல நடிகர்கள் புறக்கணித்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
”நடிகர்கள் என்னை நிராகரிச்சாங்க ”
இது குறித்து வாணிபோஜன் நேர்காணலில் கூறுகையில் “நான் சீரியலில் இருந்து வந்தவள் என்பதற்காகவே என்னை எத்தனை ஹீரோஸ் புறக்கணித்தார்கள் தெரியுமா ? சில படங்களில் கையெழுத்து போடப்போகும் கடைசி நிமிடத்தில் கூட , இவங்க சீரியல் ஆர்டிஸ்டாச்சேன்னு சொல்லி வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. என்னுடைய நடிப்பை பார்க்காமல் , நான் எங்கிருந்து வந்தேன் என்பதைத்தான் பார்த்தாங்க. அதிர்ஷ்டவசமா எனக்கு விதார்த் கூட நல்ல ரோல் கிடைச்சது. அதே ஹீரோஸ் படங்களை இப்போ நான் நிராகரிச்சுட்டேன். காரணம் எனக்கு அவங்க அப்போ மரியாதை தரவில்லை. எனக்கு அவங்களோட நடிக்க வேண்டாம்“ என மிகவும் போல்டாக சுயமரியாதைதான் முக்கியம் என பேசியிருக்கிறார் வாணி போஜன்.
வாணிபோஜன் தற்போது அருண் விஜய்யுடன் “தமிழ் ராக்கர்ஸ்” என்னும் வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். கடந்த ஆக்ஸ்ட் 19 ஆம் தேதி ஓடிடியில் இந்த வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.