லாலலா லாலா லாலலா… என்னும் விக்ரமன் படத்துக் கோரஸ் கேட்கும்போதெல்லாம் மனம் தானாக எஸ்.ஏ.ராஜ்குமாரை நினைந்து மீளும். இவரது சிறப்பே இதுபோன்ற கோரஸ் பாடகர்களை பாடல்களிலும், பின்னணி இசையிலும் அதிகம் பயன்படுத்தியதுதான். இவர். 'விக்ரமன் படத்து இசையமைப்பாளர்' என்று இவர் அறியப்பட்டபோதும் இவரை முதலில் அறிமுகப்படுத்தித் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தவர்கள் ராபர்ட் ராஜசேகரன். அவருடைய அசிஸ்டண்ட் ஆன எழில் இயக்கிய முதல் படமான துள்ளத மனமும் துள்ளும் திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் இளைஞர்களின் மனதை ஆண்டன. விஜய், சிம்ரன் நடித்து பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆன திரைப்படம் தான் துள்ளத மனமும் துள்ளும். ஆர்.பி.சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்த இந்த திரைப்படம் விஜய்க்கு இன்றளவும் பெரிதாக பேசப்படும் திரைப்படமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தின் இசையும்தான். தற்போது பெரிதாக திரைப்படங்களுக்கு இசையமைப்பது இல்லை என்றாலும், அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.



துள்ளதா மனமும் துள்ளும் திரைப்படத்திற்கு அவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனது குறித்து பேசுகையில், "துள்ளத மனமும் துள்ளும் திரைப்படத்திற்கு நான் மியூசிக் டைரக்டர் கிடையாது, முதலில் வேறு யாரோ ஒரு புதிய இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்திருந்தனர். அப்போது நான் சூப்பர்குட் ஃபிலிம்ஸ்ற்கு இரண்டு படங்கள் செய்துகொண்டிருந்தேன். அப்போது ராபர்ட் ராஜசேகர் சாரோட அசிஸ்டண்ட் எழில் விஜய்க்கு படம் பண்றாருன்னு கேள்விப்பட்டேன். யாரோ புது இசையமைப்பாளர் பண்றாராம், சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஏன் என் பேர சொல்லன்னு எனக்கு ஒரு எதிர்பார்ப்பு. உடனே ஒரு ஆர்வத்தில் கதை என்னன்னு கேக்குறேன், எழில் கதைய சொன்னதும் ஐயையோன்னு ஆகிடுச்சு எனக்கு, பிரம்மிச்சு போய்ட்டேன். ஏன் நீங்க ஏன் என் பேர சொல்லலன்னு கேட்டேன் எழில் கிட்ட, அவரு ரொம்ப யதார்த்தமா 'சார் நமக்கே சான்ஸ் கிடைக்கிறது பெருசு, இதுல நான் எப்படி சார் கேக்குறது'ன்னு சொன்னார். முதல் படம்ல, அதனால நான் புரிஞ்சுகிட்டு, நான் பாதுக்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.



நேரா ஆர்.பி.சவுத்ரி ஆபிஸ்க்கு போறேன். என்னமாதிரியான கதை பண்றீங்க, ஏன் என் பேர சொல்லலன்னு கேக்குறேன்… அட போய்யா ஏற்கனவே உன் கிட்ட ரெண்டு படம் இருக்கு, இதை வேற கொடுத்து உன் பின்னாடி அலைய முடியாது என்னாலன்னு சொல்லிட்டார். நான் அவர்கிட்ட சொன்னேன், "சார் தமிழ் சினிமாவோட இசையையே மாத்தி அமைக்கபோற படம், 300 நாள் ஓடப்போற படம்…" ன்னு நான் சொல்ல சொல்ல ஆர்வமாகுறார். 'எனக்கு ஒரு 10 நாள் வேலை தான் அதை முடிச்சுட்டு உடனே வந்துடறேன்னு சொன்னேன்'. வந்துருவியான்னு கேட்டாரு, அதெல்லாம் வந்துடலாம்ன்னு சொல்லி அப்புறம் தான் நான் அதுல வேலை பாத்தேன்." என்று கூறி முடித்தார்.