நடிகர் விஷால் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விருதுகள் குறித்து பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. விருதுகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லையென்று கூறிய அவர் தனக்கு விருது வழங்கப்பட்டால் அதை குப்பையில் தூக்கி வீசுவேன் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மகுடம் படத்தை இயக்கும் விஷால்
கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஷாலுக்கு அண்மையில் சாய் தன்ஷிகாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நடிகர் சங்க கட்டிட கட்டுமான பணிகள் முடிந்ததும் அவரது திருமண தேதி முடிவு செய்யப்படும் என விஷால் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. நடிப்பு பொறுத்தவரை தனது 35 ஆவது படமாக உருவாகி வரும் மகுடம் படத்தில் நடித்து வருகிறார். ஈட்டி , ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இப்படத்தை இயக்கி வந்தார். படப்பிடிப்பின்போது கருத்து வேறுபாடு எற்பட்டதால் இப்படத்தை விஷாலே இயக்க முடிவுசெய்துள்ளார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கிய நிலையில் விஷாலே நடித்து இயக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகின. அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய விஷால் விருதுகள் குறிதுத் பரபரப்பான கருத்துக்களை பேசியுள்ளார்.
விருது கொடுத்தால் குப்பையில் வீசுவேன்
" எனக்கு விருதுகள் மேல் நம்பிக்கை கிடையாது. விருதுகள் எல்லாம் பைத்திய காரத்தனம். 4 பேர் உட்காந்துகிட்டு 7 கோடி பேருக்கும் பிடித்த படம் , பிடித்த நடிகர் , பிடித்த துணை நடிகரை முடிவு செய்வதற்கு இந்த 4 பேர் என்ன மேதாவிகளா. தேசிய விருதையும் சேர்த்து தான் நான் சொல்கிறேன். நீங்கள் மக்களிடம் சர்வே எடுங்கள். மக்கள் கருத்துதான் முக்கியம். எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதால் நான் இதை சொல்லவில்லை. விருதுகள் எல்லாம் புல்ஷிட் .எனக்கு விருது கொடுத்தார்கள் என்றால் போகிற வழியில் குப்பையில் வீசிவிடுவேன். இல்லையென்றால் அந்த விருது தங்கமாக இருக்கும் பட்சத்தில் ஏதாவது நகைகடையில் கொடுத்து அதில் வரும் பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்வேன். 8 பேர் உட்கார்ந்துகொண்டு 8 கோடி பேருக்கு பிடித்த நடிகரை முடிவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. எனக்கு விருது கொடுக்கிறார்கள் என்றால் என்னைவித அந்த விருதை மதிக்கும் ஒருவருக்கு அதை கொடுக்க சொல்வேன்" என விஷால் கூறியுள்ளார்