தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் லிஸ்டில் தவிர்க்கமுடியாத இடம் பிடித்திருக்கும் சூர்யாவுக்கு நேற்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், அவருக்கு பிறந்தநாள் பரிசாக தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது.  தேசிய விருதுகளில் அவருடைய சூரரை போற்று திரைப்படம் ஐந்து விருதுகளை வென்றது. அதில் சூர்யா சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார். ஊரே கொண்டாடும் சூர்யாவை பற்றி அவரது தந்தை முன்பொரு நேர்காணலில் பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை கூறி உள்ளார்.


தயாரிப்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி இல்லை


தயாரிப்பாளர் சூர்யா குறித்து கேட்டபோது, "தயாரிப்பாளராக இருப்பதால் அவரது சூழ்நிலைக்கு ஏற்றாற்போல படம் எடுக்க முடியும். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படம் செய்ய வேண்டும் என்பது நல்ல யோசனைதான். ஆனால், முன்பே சொன்னது போல, சினிமா துறையில் வெற்றி என்பது நிரந்தரமல்ல. சிவாஜி தொடங்கி பல நடிகர்கள் படம் எடுத்து கடன் அடைக்க முடியாத வரலாறு எல்லாம் இங்கு உண்டு. சூர்யாவும் பல படங்களில் நஷ்டம் அடைந்திருக்கிறார். ஆனால் இரண்டு படங்கள் நஷ்டம் என்றாலும் மூன்றாவது படத்தில் அது சரியாகிவிடும். இருந்தாலும், இது எனக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. அந்த காலத்திற்கு அவர்கள் புத்திசாலித்தனமாக இருந்து வெற்றி பெறுவார்கள் என நினைத்து கொள்வேன் அவ்வளவுதான்", என்றார்.



வாரணம் ஆயிரம்


"எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் யாருமே அதுபோல, உடம்பை வருத்தி மேக்கப் போட்டு நடிக்க முடியும் என தோன்றவில்லை. சிவாஜி மிகப்பெரிய நடிகர்தான். அவரது நடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இப்படி சூர்யாவை போல உடம்பை இளைத்து, கன்னம் ஒட்டி, கண்கள் உள்ளே சென்று நடிக்க யாரும் பெரிதாக முன்வரமாட்டார்கள். அதை எப்படி சூர்யா செய்தார் என்பது இப்போது வரை எனக்கு ஆச்சர்யம். அந்த படத்தில், அப்பாவுடைய இறந்த உடல் கீழே இருக்கும். மகன் மேலே அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பார், 'அம்மா, அப்பா கிளம்புறாரு' என்று கூறுவார். அந்த காட்சியில் நானே இறந்து சுடுகாட்டிற்கு செல்வது போல இருந்தது. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்" என்று கூறியவர் கண் கலங்கினார்.


தொடர்புடைய செய்திகள்: The Gray Man Review: தனுஷின் ஹாலிவுட் எண்ட்ரி.. மிரட்டும் சண்டைக்காட்சிகள்.. எப்படி வந்திருக்கிறது தி கிரே மேன்..?


பிடித்த படம் 


சூர்யா நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தது எது என்று கேட்டபோது, "முதலில் 'நந்தா' தான். எவ்வளவோ திரைப்படங்கள் எனக்கு பிடித்திருந்தாலும், இந்த படத்தில் அம்மாவின் அன்பிற்கு ஏங்கும் ஒரு மகனாக நடித்திருப்பார். சாப்பாட்டை எடுத்து தட்டில் எடுத்து வந்து அம்மாவை ஊட்ட வைப்பார். சூர்யாவே மற்றொருமுறை நினைத்தாலும் அதுபோல நடிக்க முடியாது. சூர்யாவின் கண்கள் அவருக்கு மிகப்பெரிய பலம்தான். பெரிதாக இருக்கும். தாய் விஷம் வைத்தது தெரிந்தும் கண்கள் நீர் கோர்க்க சிரிப்பார். அதற்கு பிறகு சூர்யா பல படங்கள் நடித்திருந்தாலும் இதுதான் எப்போதும் எனக்கு பிடித்த ஒன்று" என்று நெகிழ்ந்தார்.



நிறைய விருதுகள் வாங்குவார்!


லயோலா கல்லூரியில் சூர்யா படித்து கொண்டிருந்தபோது ஒரு ஜோதிடர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். 'இந்த பையன் கலைத்துறையில் எதிர்காலத்தில் பெரிய ஆளாக வருவான்', என்றார். நான் அதை கேட்டு நான் சிரித்தேன். 'நல்லா பார்த்து சொல்லுங்க, சின்னவனா, பெரியவனா?' என்று கேட்டேன். 'பெரிய பையன்தான்... உங்களை விட பெரிய நடிகனாக, அதிகம் சம்பாதிக்க கூடிய ஒருவராக வருவார், நிறைய விருதுகளை வாங்குவார் என்று ஜோதிடர் சொன்னார்', என்றவர் இது கேட்டும் சிரித்த நான் அதையெல்லாம் அப்போது நம்பவில்லை. ஆனால், 1991-ல் அவர் சொன்னது போலவே, 1997-ல் சூர்யாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சூர்யா இந்த அளவிற்கு வருவார் என சத்தியமாக நானும் என் துணைவியாரும் எதிர்ப்பார்க்கவே இல்லை." என்று கூறி இருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.