அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சாணிக் காயிதம் படம் மே 6-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது. சாணிக் காயிதம் தான் செல்வராகவன் நடிக்க ஒப்புக் கொண்ட முதல் படமாகும். ஆனால் அதன் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்த பீஸ்ட் படம் முதலில் ரிலீஸாகிவிட்டது. தற்போது படம் வெளியாக இருக்கும் நிலையில், பட ப்ரோமோஷனுக்காக நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். அதில் அவர் தனுஷ் குறித்து பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனுஷை அப்பா கஸ்தூரி ராஜா வற்புறுத்தி நடிக்க அழைத்து வந்தது போல என்னையும் வற்புறுத்திதான் அழைத்து வந்தார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அவரை கதை சொல்லி வற்புறுத்தியது அருண் மாதேஸ்வரன்.



அவர் கொடுத்த நேர்காணலில் அவரிடம், படப்பிடிப்பில் தனுஷுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வருமா என கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த செல்வராகவன், "தனுஷை இயக்கும்போது, அவர் ஒரு நடிகர், நான் ஒரு இயக்குநர், அதனால் எங்களுக்குள் படைப்பு வேறுபாடுகள் எதுவும் ஏற்படுவதே இல்லை. நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் தெளிவாகடிகர்பின்தொடர்கிறார். ஆனால் இப்போ என் பொறுப்புகள் அதிகமாகிவிட்டன, அவர் இரண்டு முறை தேசிய விருது பெற்ற நடிகராக, ஹாலிவுட் நடிகராக என் முன் நிற்கிறார். அப்படிப்பட்ட நடிகரைக் கையாள, அவர் என் சகோதரர் என்பதை நான் மறந்துவிட்டுதான் செட்டுக்குள் செல்ல வேண்டி இருக்கிறது. அவர் நிறைய சாதித்திருக்கிறார். அவருடைய திறமைக்கு நியாயம் செய்யும் பொறுப்பு நம்மை தொற்றிக்கொள்கிறது", என்று கூறினார். கடைசியாக இயக்குநராக தன் தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் செல்வராகவன். மேலும் அந்த படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் சாணிக்காயிதம் திரைப்படம் ஓடிடி வெளியீடாக வருவது குறித்து பேசியிருந்தார், "நான் 15 வருடங்களுக்கு முன்பே சொன்னேன், சினிமாவின் எதிர்காலம் ஓடிடிதான் என்று. அது இப்போது நடந்து கொண்டு இருக்கிறதுக்கு. அதற்காக தியேட்டர்கள் அழியப்போவது இல்லை, தியேட்டர் அனுபவம் என்பது தனி விஷயம். என்னதான் அதனை ஓடிடி தராது என்றாலும், ஓடிடியின் வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது. ஏனெனில் அதில் உங்களுக்கு நிறைய சுதந்திரம் கிடைக்கிறது. நம் உணர்வை கிட்டத்தட்ட சமரசம் இன்றி கடத்திவிடும் வாய்ப்பு கிடைக்கிறது." என்று கூறினார்.