ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ள நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ், ரெப்போ ரேட் விகிதம் 0.40 சதவீதம் உயர்வதாகவும், இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், உலகப் பொருளாதாரத்தின் நிலைமை மோசமடைந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மீதான பணவீக்க அழுத்தம் தொடர்கிறது என்று கூறிய அவர், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் கவலை அளிக்கிறது என்றார். மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரின் காரணமாக பணவீக்கம் மற்றும் வளர்ச்சியின் கணிப்பு மாறிவிட்டது என்று சக்தி கந்த தாஸ் கூறினார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் தான் ரெப்போ ரேட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டிருப்பதால், ரிசர்வ் வங்கியிடம் நாட்டில் உள்ள வங்கிகள் அதிக விகிதத்தில் கடன் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழல் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இது கடன் வாங்குபவர்களின் இஎம்ஐ-களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது புதியதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே கடன் வாங்கி இஎம்ஐ செலுத்தி வருபவர்களுக்கும் பொருந்தும். அப்படியானால் இனி வரும் இஎம்ஐ தொகை அதிகரிக்கும்.
கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு மே 22ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. கொரோனா காரணமாக சரிந்த பொருளாதாரத்தை சரி செய்யும் வகையில், பொருளாதாரத்தை அதிகரிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 4 சதவீதமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது 0.40% அதிகரித்திருப்பதன் மூலம் ரெப்போ ரேட் விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு மும்பை பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலித்துள்ளது. சென்செக்ஸில் 1300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 55,669 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி 300 புள்ளிகள் குறைந்து 16,700 புள்ளிகளில் முடிவடைந்தது. இதனால், மோட்டார், வங்கி, மின்சாரம், உலோகம், சுகாதாரம் ஆகியவற்றின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
அப்பல்லோ மருத்துவமனை, அதானி துறைமுகம், ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபினான்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. எனினும், ஓஎன்ஜிசி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பவர் க்ரிட் கார்ப்பரேஷன், என்டிபிசி மற்றும் கொடாக் மகேந்திரா பேங் ஆகியவை இன்று உயர்வை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.