தமிழ் திரையிலகில் நடிகர்களுக்கு என தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கம் இருப்பதை போல், தெலுங்கு திரையுலகிலும் மூவி ஆர்ட்ஸ் அசோசியேசன் (MAA) என்ற பெயரில் நடிகர்கள் சங்கம் செயல்பட்டு வருகின்றது. இதில் மொத்தம் 900 நடிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில், தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.
இந்தத் தேர்தலில் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டார். பிரகாஷ் ராஜூக்கு தெலுங்கு திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அவரது தம்பியான பவர் ஸ்டார் பவன் கல்யாண் உட்பட பெரிய நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பிரகாஷ்ராஜ் அணி தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 900 பேரில் 833 பேருக்கு மட்டுமே ஓட்டுப் போடும் உரிமை உள்ளது. நேற்று நடந்து முடிந்த தேர்தலில் 655 நடிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் முடிவடைந்த பிறகு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், விஷ்ணு மஞ்சுக்கு 381 வாக்குகள் கிடைத்தன. ஆனால், வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் 274 ஓட்டுக்களை மட்டுமே பெற்றார். இதனால் 113 வாக்குகள் வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்தார்.
இது தொடர்பாக ஐதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரகாஷ் ராஜ், ”தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் சுமார் 650 உறுப்பினர்கள் தேர்தலில் பங்கெடுத்து வாக்குகளை பதிவு செய்துள்ளார்கள். தேர்தலில் வெற்றிபெற்ற மஞ்சு விஷ்னு, சிவ பாலாஜி, ரகு பாபு உள்ளிட்டோருக்கு எனது வாழ்த்துக்கள். இவர்கள் சங்கத்துக்கும், நடிகர்களுக்கும் தேவையான பணியை செய்வார்கள் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த இந்த தேர்தலில் பிராந்தியவாதம் மேலோங்கி இருந்ததாக பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். “நான் எந்த மாநிலத்தை சேர்ந்தவன் என்பதை பார்த்து வாக்களித்தார்கள். தெலுங்கர் அல்லாதவருக்கு வாக்களிக்காதீர்கள், தெலுங்கர் அல்லாதவர் தேர்தலில் வாக்களிக்கலாம், ஆனால் போட்டியிடக் கூடாது என்ற கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனது பெற்றோர்கள் தெலுங்கர்கள் இல்லை. அது எனது தவறோ எனது பெற்றோரின் தவறோ கிடையாது. உறுப்பினர்கள் நல்ல தெலுங்கு மகனை தேர்வு செய்துள்ளார்கள். நானும் அவரை ஏற்கிறேன். ஆனால், ஒரு கலைஞனாக எனக்கு சுய மரியாதை உள்ளது. எனவே தெலுங்கு நடிகர் சங்கமான MAA உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன்.” என பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.