'தலைவி' திரைப்படத்திற்காக, 20 கிலோ கூட்டிக் குறைத்ததால் உடலில் நிரந்த ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். 'தலைவி' , இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில், தயாரிப்பாளர் விஷ்ணு இந்துரி தயாரிப்பில் வெளியாகியிருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆரம்பத்தில் இது பயோபிக் என்று சொல்லப்பட்டாலும் கூட உண்மையிலேயே இது அப்படியான பயோபிக் இல்லை என்றே பல தரப்பினரும் கூறுகின்றனர். 
இந்நிலையில், தலைவி திரைப்படம் குறித்து கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவு செய்துள்ளார்.


அதில், 6 மாதங்களில் 20 கிலோ எடையை அதிகரித்து, அதனைக் குறைப்பது என்பது எனது உடலில் பல்வேறு மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. எனது உடலில் நிரந்தரமான ஸ்ட்ரெச் மார்க்குகள் விழுந்துள்ளன. ஆனால், எந்த ஒரு கலையும் உயிர் பெற அதற்கான விலையைத் தர வேண்டுமல்லவா? பெரும்பாலான நேரத்தில் அந்த விலை பணமல்ல, அந்த கலைஞரேதான் என்று பதிவிட்டுள்ளார். 


தனது முந்தைய புகைபடத்தையும் தலைவி படத்திற்காக அவர் உடல் எடை அதிகரித்தபின் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.




கங்கனாவுக்கு பாராட்டைப் பெற்றுத்தந்த தலைவி:


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படமான தலைவி, நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு செப்டம்பர் 10-ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கங்கனா நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் ரோலில் கங்கனாவை நடிக்க வைத்தது சரியான தேர்வு என பலர் பாராட்டி வருகின்றனர். இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறவில்லை. அதோடு, தலைவி படத்தில் வரும் காட்சிகள் சில உண்மைக்கு புறம்பாக இருப்பதாக ஜெயக்குமார் உட்பட பல அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். 






இரண்டாம் பாகம் வருகிறதா?


இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் காட்டுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளதாக தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இதனால் தலைவி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. தலைவி படத்தை பார்த்த பலர் பல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, இதை சேர்த்திருக்கலாம், அதை சேர்த்திருக்கலாம் என கருத்து கூறி வருகின்றனராம். அதனால் தான் இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஆனால் தலைவி இரண்டாம் பாகத்தில் கங்கனா நடிப்பாரா என்பதுதான் சந்தேகம். ஏனென்றால், சமீபத்தில் நடந்த தலைவி ப்ரோமோஷன் விழாவில் பேசிய கங்கனா, பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் தலைவி படத்தில் நடித்துள்ளேன்.


அடுத்ததாக தெலுங்கு படத்தில் நடிக்க ஆசை. பிரபாஸுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமென நினைக்கிறேன். பிரபாஸுடன் நடிக்க வாய்ப்பு கொடுக்குமாறு பூரி ஜெகன்னாதனிடம் பலமுறை கேட்டு விட்டேன். தொடர்ந்து கேட்டு வருகிறேன் என தெரிவித்தார். ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவியில் நடித்ததை போல், அடுத்தபடியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை படத்தை தானே இயக்கி நடிக்க போவதாக கங்கனா கூறி உள்ளார். இதனால் தலைவி 2 உருவாகினாலும் கூட அதில் கங்கனா நடிப்பாரா என்பது சந்தேகமே. கங்கனா ரனாவத், அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியிருந்தாலும் கூட நடிப்பு ரீதியாக அசைக்க முடியாத ஆளுமை. குயின் திரைப்படமாக இருக்கட்டும், ஜான்சி ராணி வரலாற்றுக் கதையாக இருக்கட்டும் இப்போது வெளியான தலைவியாக இருக்கட்டும் அவர் என்றுமே தனது நடிப்பில் சமரசம் செய்து கொண்டதில்லை என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.