நேரம் படத்தின் மூலம் இயக்குநராகி அதன்பிறகு ப்ரேமம் என்ற மெகாஹிட் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்,  ரஜினி மற்றும் கமலுக்காக தனித்தனியாக ஸ்கிரிப்ட்களை வைத்திருப்பதாகவும், அவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்கவும் ஒரு ஸ்கிரிப்ட் இருப்பதாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.


அப்போன்ஸ் புத்திரன்


அல்போன்ஸ் புத்திரன் 2013ல் நேரம் என்ற திரைப்படத்தை இயகியதன் மூலம் தமிழ் சினிமாவிலும், மலையாளம் சினிமாவிலும் அறிமுகம் ஆனார். அதன் பிறகு நேரடியாக மலையாளத்தில் எடுத்த திரைப்படமான பிரேமம் எதிர்பாரா விதமாக தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. தமிழ்நாட்டு மக்கள் மலர் டீச்சருக்காக உருகி ஊற்றினார்கள். சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா என அந்த திரைப்படத்தில் அறிமுகமான மூன்று நடிகைகளுமே பெரிய இடத்திற்கு சென்றனர். நிவின் பாலிக்கு அது ஒரு மிகப்பெரிய திருப்பமாக அமைந்து இருந்தது. இந்த திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட பெரும் வசூலை அள்ளி குவித்தது. ஆனால் அதன்பிறகு சரியான தளம் கிடைக்காமல் பல நாட்களாக திரைப்படங்கள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார் அல்போன்ஸ் புத்திரன். தற்போது இரண்டு மலையாள படங்கள் இயக்கி வருவதாக செய்திகள் வருகின்றன.



அல்போன்ஸ் ட்வீட்


இந்நிலையில், அவர் எழுதியுள்ள பதிவில் “நான் ரஜினி சார் அல்லது கமல் சாரை நேரில் சந்தித்தால், அவர்கள் இருவருக்கும் என்னிடம் ஸ்க்ரிப்ட் உள்ளது. அதனை விவரிப்பேன், கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும். ஆனால் அதிர்ஷ்டத்தின் அகராதியில் என் பெயர் இல்லை என நினைக்கிறேன். எனவே, என் வாழ்க்கையில் இப்போது வரை நான் அவர்களை சந்தித்ததில்லை. எதிர்காலத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருந்தால், நான் அவர்களை சந்திக்கலாம், அவர்கள் எனது ஸ்கிரிப்ட்களை விரும்பினால், நான் எனது எல்லா திறன்களையும் பயன்படுத்தி இருவருக்கும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படங்களை எடுத்து கொடுப்பேன். மேலும் கிடைக்கும் மற்றொரு வாய்ப்பில் நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படத்தில் இருவரையும் சேர்த்து ஒரே படத்தில் நடிக்க வைப்பேன்", என்று எழுதி உள்ளார்.


ரஜினி கமல் திரைப்படங்கள்


ரஜினி கமல் இருவரும் சேர்ந்து ஆரம்பகால கட்டங்களில் பல படங்களில் நடித்திருந்தாலும் இருவரும் வெவ்வேறு நிலையை எட்டிய நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் அவர்கள் இருவரையும் வைத்து எடுப்பதற்கான பட்ஜெட் தமிழ் சினிமாவுக்கு கொள்ளாது என்பது தான் காரணம். இந்த 40 ஆண்டுகாலத்தில் ரஜினி கமல் இருவரையும் இணைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க பல இயக்குநர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த முயற்சி தற்போதுவரை கைகூடாமல் இருந்து வருகிறது. அவர்கள் காம்போவில் வந்த அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது ஆகிய படங்கள் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதுபோல ஒரு மிகப்பெரிய படத்தை கொடுக்க அல்போன்ஸ் புத்திரனால் முடியும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.






தற்போது இயங்கி வரும் படங்கள்


அல்போன்ஸ் புத்திரன் தற்போது ஃபஹாத் பாசில் மற்றும் நயந்தாரா நடித்த 'பாட்டு' என்னும் திரைப்படத்தையும், நயன்தாரா பிரித்விராஜ் நடிக்கும் 'கோல்டு' எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் தமிழிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் தனது அடுத்த திரைப்படமான நெல்சன் திலிப்குமார் இயக்கும் தனது 169′ படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கமலின் ‘விக்ரம்’  படம் வரும் –ஜூன் 3 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


ரசிகர்கள் விருப்பம்


அல்போன்ஸ் புத்திரன் குறிப்பிட்டதுபோல நடக்க வேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஏனெனில் அவர் எடுத்த பிரேமம் திரைப்படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் கடுமையான வரவேற்பை பெற்றது. ஸ்கிரிப்ட்களை விவரிக்க அல்போன்ஸ் புத்திரனுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் வகையில் கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் நெருக்கமான வட்டங்களுக்கு ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்கள் இது நிச்சயமாக ஒரு புதிய காம்போவாக இருக்கும் என்றும் பார்வையாளர்களுக்கும் புதிதாக ஒன்றைக் கொடுக்கும் என்று கூறி வருகின்றனர்.