சூப்பர்மார்க்கெட்டுக்கு மளிகைப்பொருட்கள் வாங்கச் சென்றப் பெண் அங்கே கடை வாசலில் அமர்ந்திருந்த வீடற்றவர் ஒருவருடன் காதல் கொண்டார். காதல் கொண்டதோடு மட்டுமல்லாமல் தற்போது திருமணம் செய்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கனடாவைச் சேர்ந்த ஜாஸ்மின் க்ரோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் வெளியே இருந்த மெக்காலி என்கிற வீடற்ற நபரை பார்த்ததும் பணம் கொடுக்கச் சென்றுள்ளார். அதை மெக்காலி வேண்டாம் என முதலில் மறுத்துள்ளார். ஆனால் ஜாஸ்மின் ஷாப்பிங் முடித்து வெளியே வந்ததும் அவருடைய பைகளை அவருக்காகத் தூக்கி உதவி இருக்கிறார். அந்த நொடி அவருடைய வாழ்க்கையையே மாற்றப்போகிறது என இருவருமே அறிந்திருக்கவில்லை.
மெக்காலி மர்ச்சி எனப்படும் அந்த நபரிடம் தான் ஏதும் சாப்பிட வாங்கித்தரட்டுமா என ஜாஸ்மின் கேட்டதும் முதலில் அவர் மறுத்துள்ளார். பின்னர் சரி எனக் கூறியுள்ளார். இருவரும் அருகில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளனர். உணவின்போது இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளனர். இதை அடுத்து அவருடன் தொடர்பில் இருக்க அருகில் இருந்த கடைக்குச் சென்று ஒரு சிறிய போனை வாங்கிக் கொடுத்துள்ளார் ஜாஸ்மின். அந்த போனில் இருவரும் தொடர்ச்சியாக மெசெஜ் வழியாகப் பேசி வந்துள்ளனர்.
‘மெக்காலியைச் சந்தித்ததை என்னால் மறக்க முடியவில்லை.முதல் டேட்டிங் செல்வதற்கு முன்பு அவரிடம் நிறைய பேசிப் பழகினேன்.பின்னர் ஒருநாள் நானே டேட்டிங் செல்லலாமா எனக் கேட்டேன்.அவரும் ஓகே சொன்னார். அன்றிரவு என் வீட்டுக்கு வந்து தங்கியவர் நிரந்தரமாகவே என்னுடன் தங்குவார் என நான் எதிர்பார்க்கவில்லை’ என்கிறார் ஜாஸ்மின். ஜாஸ்மின் மெக்காலி தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.