’மாமன்னன்’ திரைப்படத்தின் இடைவெளி ஷாட் குறித்த உண்மையை உரிய மேடை கிடைக்கும்போது  சொல்வேன்” என மாரி செல்வராஜ் வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.


மாமன்னன் வெற்றி விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது: ”என்னுடைய திரை மொழி, நடிகர்களைப் பற்றி பேசனும்னு நினைச்சிருக்கேன். அதற்கான மேடையாக இது அமைந்துவிட்டது. என்னோட திரை மொழி, கதையின் உணர்வுகளை நன்கு புரிந்துகொண்டு நடிகர்கள் நடித்திருக்கிறார்.


என் எல்லா திரைப்படத்திலும் இது உண்டு. கலைஞர்கள் மேஜிக் செய்துவிடுவார்கள்.  நான் சிதைக்கப்பட்டாலும் என் படைப்புகள் சிதைக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.அதை காப்பாற்ற போராடுவேன். என் படைப்புகளில் மட்டுமே நான் இருப்பேன். அதிலிருக்கும் நான் நிஜம்” எனப் பேசியுள்ளார்.


’மாமன்னன்’ திரைப்படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற  பதற்றத்தில் என்னுடன் பணிபுரிந்த யாரை பற்றியும் சரியாக பேச முடியவில்லை. என்னை முழுமையாக அறிந்தவர்களுடன்தான் எளிதாக பணியாற்ற முடியும். என்னுடன் இருப்பவர்களையும் நாம் முழுவையாக நம்புவேன்.அதனாலேயே என்னைப் பற்றி அவர்களிடம் சொல்லிவிடுவேன் என சக கலைஞர்கள், உடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் முதல் அனைவரையும் பாராட்டி நன்றி தெரிவித்து பேசினார். ” என்னை வியக்க கூடிய ஆள் தேவையில்லை. என்னை நம்பும் மனிதர்கள்தான் அவசியம். அப்படி என்னை நம்பிய மனிதர்கள் உடனிருந்தனர். ” என்று பெருமிதத்துடன் கூறினார்.


40 ஆண்டுகளுக்கு பிறகும் பேசப்பட வேண்டும்


”என்னுடைய படைப்புகள் நான்கு நாள் கொண்டாட்டமாக இல்லாமல், 40 ஆண்டுகள் கழித்தும் பேசப்பட வேண்டும். அப்படியானதாக இருக்க வேண்டும் என எடிட் செய்ய சொன்னேன். அப்படி ஒவ்வொருவரும் என் உணர்வுகளை புரிந்துகொண்டு பணியாற்றினர்.” முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பேசும் கதையை தேர்ந்தெடுத்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. இந்த அரசியல் எப்படி பேசப்பட வேண்டும் என்ற கேள்வி இருந்தது. தமிழ்நாடு அரசியலின் ஆளுமை உடன் இணைந்து ஒரு திரைப்படம்; அதில் நேர்மை இருக்கனும்னு நினைத்தேன். அதை அவரிடம் (உதயநிதி ஸ்டாலின்) சொல்வதில் தயக்கம் இருந்தது. நான் நினைத்ததைவிட அவரிடம் அதிக நேர்மை இருந்தது. இரண்டு இணைந்ததால் இந்தப் படம் சாத்தியமானது.


திரைப்படத்தின் இடைவேளைக்கு பிறகு இன்னும் நல்லா எடுத்திருக்காலம்னு விமர்சனங்கள் எழுந்தன. எனக்கும் ஆசைதான்.  அவ்ளோ ஸ்பேஸ் இருந்தது. இருந்தாலும், விருப்பம் இல்லை. இந்தப் படம் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவு இருந்தது. வணீக ரீதியாக கடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பார்வையாளர்கள் திரையரங்கிலிருந்து வெளியே போகும்போது, ‘இந்தப் படம் செமையாக இருந்தது. பட்டாசு. என சொல்லக் கூடாது என்று நினைத்தோம். இதிலிருந்து பார்வையாளர்கள் எதையாவது எடுத்துசெல்ல வேண்டும்; எதாவது பேச வேண்டும்; பேசாமல் போக வேண்டும்; திட்ட வேண்டும்; இது ஜாஸ்தியா இருக்கே; ஆனால், ஆர்பரித்துவிட்டு மட்டும் சென்றுவிடக் கூடாது. இதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. அந்த நேர்மையே நீங்கள் திரையில் பார்த்தது.


ஓர் அரசியில் ஆளுமையை வன்முறை நோக்கமாக கொண்டு எடுக்கக் கூடாது என்று என்னை கட்டுப்படுத்திகொண்டு எடுத்த படம். அவருக்கு (உதயநிதி ஸ்டாலின்) பொறுப்பு உள்ளது. சினிமாவுக்காக தப்பான முன்னுதாரணமாக இருந்துவிடாது என நினைத்தேன்.  


உதயநிதி கேட்டார்,” வாளை கொடுத்திருக்கீங்களே! வெட்டுறதுக்கா?ன்னு ‘ இல்லை. என்னிடமும் இருக்கு என்பதன் பதிவு மட்டுமே.!’ வேற ஏதும் இல்லை.  கர்ணன் க்ளைமேக்ஸ்ல அழுதேன். தனுஷ் சாரிடம் கேட்டது நீங்க அழறது மட்டுமே போது மாரி செல்வராஜ் காணாமல் போய்விடலாம். என்  படைப்புகள் என்னைத் தேடி வர காரணியாக இருக்கும்னு எனக்குத் தெரியும்.” என தனது படைப்பு மற்றும் பணி அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.


தற்கொலை முயற்சி - மீள்தல் 


இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததும் அதிலிருந்து மீள்வதற்கு வடிவேலு காமெடி வீடியோ பெரும் காரணமாக இருந்ததையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பேசினார்.  “ என் வீட்டில் வடிவேலு, போட்டோ, இளையராஜா படம் இருக்கும். எல்லாரும் கேட்பாங்க. என் வாழ்வில் நிறைய முறை தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறேன். ஒருநாள் இரவு தனிமைப்பட்டு தற்கொலை கடிதம் எழுதி முடித்தபோது, வடிவேலு காமெடி பார்த்து சிரித்தேன்; மனது மாறியது; மறுநாள் வேற ஒரு ஆளாக பேசினேன். நான் சென்னை போகிறேன். எதாவது செய்கிறேன் என்று சொன்னேன். திரையில் ஒருவன் ஏமாற்றப்படுகிறார்; துரத்தப்படுகிறார். சிரிக்கிறோம். நானும் அப்படி செய்திருக்கிறேன். ஆனால், இலக்கியம், வாழ்வு, இந்த சமூகத்தை புற்று கவனிக்க தொடங்கியபோது வடிவேலு சார் பற்றிய பார்வை மாறியது. அதுதான் சினிமா பயணம் மாற்றிய புள்ளி. அது ஒரு ரசாயன மாற்றம்.” என்று வடிவேலு தற்கொலை முயற்சியில் இருந்து மீண்டெழுந்து வாழ்க்கையை தொடங்கியதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார் என பதிவுசெய்தார்.


என்னைச் செதுக்கியவர் இயக்குநர் ராம்


” என்னுடைய எல்லை மீறல், என் படைப்பின் மீதான பயம். அதை நியாப்படுத்த விரும்பல. என் படைப்புகளை விட, நான் சிதைக்கப்படுவேன் என்று தெரியும். என்னை சிதைக்க பலரும் விரும்புவார்கள் என்பதும் தெரியும். இடஹி நான் உதவி இயக்குநர்களிடம் சொல்லியிருக்கிறேன். இயக்குநர் ராம் என்னை செதுக்கினார். நான் சாதாரண உதவி இயக்குநராக நடத்தப்பட்டிருந்தால், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் எடுத்திருக்க மாட்டேன். வணீக ரீதியிலான படம் மட்டுமே எடுத்திருப்பேன். என்னை அங்குலம் அங்குலமாக செதுக்கினார்; என் பலவீனங்களை உடைத்தார். ’உங்கிட்ட ஒன்னு இருக்குடா, வெளிய வரனும்’ அவ்வளவு மெனக்கெட்டார். 400 பணத்தோட இந்த நகரத்துக்கு வந்தபோ இருந்த சென்னை, மெரீனா பீச படுத்திருந்தப்போ,. சரவணா ஸ்டோர்ஸ் வேலை பார்த்தப்ப, பெட்ரோல் பங்க்ல பணி செய்தப்ப, ஆபிஸ் பாயாக இருந்தப்ப சென்னை எப்படி இருந்ததுன்னு எனக்குத் தெரியும். 15 ஆண்டுகள் அவருடன் இருந்தேன். ஒரு நாள் தவறாம வாசிக்க வைச்சார். ஆசானாக, அண்ணாக.. ஏன்னா. மாரி பிழைகள் செய்துட்டு இருந்த ஒரு பையன். நான் புரிந்துகொண்டதை பிரதிபலிக்க தெரியாது.  அதை என்னை உணர செய்து, செதுக்கினார்.


நான் ஓடிப் போய் முட்டியதற்கு பிறகுதான் தெரியும் அது சுவரா? மனிதரா என்று.. நான் செய்தவற்றை, என்னுடைய சிந்தனையை பிழைகளாக கருதுபவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அது என் வேகம், வாழ்வு; என்று உணர்ந்து நம்புபவர்களுக்கு நன்றி!” என்று வெற்றி விழாவில் உருக்கமாக பேசினார். எல்லாருக்கும் விடாமல் நன்றி சொல்லி உரையை நிறைவு செய்த மாரி செல்வராஜை, மைக் அருகிலிருந்து கைப் பிடித்து அழைத்துச் சென்ற உதயநிதி கட்டியணைத்து கொண்டார். கூடவே, அவரின் நகைச்சுவையாக ஏதோ மாரியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்